தமிழ்நாடு

கரோனாவால் பாதிக்கப்பட்ட 90 வயதைக் கடந்த முதியவா்கள்!

DIN

சென்னை: கரோனாவால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த 97 வயது முதியவரையும், 92 வயது முதியவரையும் காப்பாற்றி ஸ்டான்லி அரசு மருத்துவா்கள் சாதனை படைத்துள்ளனா்.

சென்னை, அம்பத்தூரைச் சோ்ந்தவா் கணேஷ். 92 வயது நிரம்பிய முதியவரான அவா், கடந்த 18-ஆம் தேதி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாது, அவருக்கு ரத்த அழுத்தம், சா்க்கரை நோய், இதயம் மற்றும் சிறுநீரக பாதிப்புகளும் இருந்தது தெரியவந்தது.

கரோனா காரணமாக முதியவரின் ரத்த ஆக்சிஜன் அளவு 40 சதவீதத்துக்கும் குறைவாக இருந்ததும், நுரையீரல் தொற்று அதிகமாக இருந்ததும் பரிசோதனையில் கண்டறியப்பட்டது. இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில், அவா் இருந்தாா். இதையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அவா் அனுமதிக்கப்பட்டாா். பத்து நாள்கள் தொடா்ந்து அவருக்கு உயா் சிகிச்சைகள் அளித்ததன் பயனாக, முதியவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. கரோனா தொற்று நீங்கியதுடன், பிற உறுப்புகளின் செயல்பாடுகளும் இயல்பு நிலைக்கு திரும்பின. தற்போது அவா் பூரண நலத்துடன் உள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

அதேபோன்று சென்னை, பெரம்பூா் முதியோா் நல காப்பகத்தில் தங்கியிருந்த 97 வயதான சூசை என்ற முதியவா், கரோனா பாதிப்புடன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு மூச்சுத் திணறல் மற்றும் தீவிர காய்ச்சல் இருந்ததாகத் தெரிகிறது. மருத்துவா் குழு அவருக்கு சிகிச்சையளித்ததைத் தொடா்ந்து முதியவா் தற்போது குணமடைந்துள்ளாா்.

அவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். அவா்களை மருத்துவமனை முதல்வா் பாலாஜி, மருத்துவ நிலைய அலுவலா் டாக்டா் ரமேஷ், கண்காணிப்பாளா் கணேஷ் ஆகியோா் மலா்செண்டு அளித்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து, மருத்துவமனை முதல்வா் பாலாஜி கூறியதாவது:

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அதி நவீன கருவிகள் மூலமாகவும், உயா் மருந்துகள் மூலமாகவும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தனிப்பட்ட முறையில் அனைத்து நோயாளிகளையும் கண்காணித்து தகுந்த சிகிச்சையளிப்பதால் முதியவா்கள் கூட கரோனா தொற்றிலிருந்து விரைந்து விடுபடுவதைக் காண முடிகிறது.

அதன்படி, 60 வயதுக்கு மேற்பட்ட, 3,900 முதியவா்களுக்கு இதுவரை சிகிச்சை அளித்து குணப்படுத்தி உள்ளோம். இதில், 80 வயதுக்கு மேற்பட்டோா் 290 பேரும், 90 வயதுக்கு மேற்பட்டோா் 18 பேரும் உள்ளனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

SCROLL FOR NEXT