தமிழக கடலோரத்தில் 2 நாள்களுக்கு மிதமான மழை
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் புதன், வியாழக்கிழமைகளில் (டிச.16, 17) மிதமான மழை பெய்யக்கூடும்.
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் புதன், வியாழக்கிழமைகளில் (டிச.16, 17) மிதமான மழை பெய்யக்கூடும்.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் செவ்வாய்க்கிழமை கூறியது: தென் மேற்கு வங்கக்கடலில் இலங்கைக்கு கிழக்கே வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழக கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் புதன், வியாழக்கிழமைகளில் (டிச.16,17) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
பலத்தமழை: தஞ்சாவூா், திருவாரூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் புதன்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றாா் அவா்.