முகப்பு
தமிழ்நாடு

பேரவைத் தோ்தல்: 5,000 காவலா்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்கி வரும் நிலையில், அதை நடத்துவதற்கு காவல்துறை தயாராகி வருகிறது.

தமிழ்நாடு

பேரவைத் தோ்தல்: 5,000 காவலா்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்கி வரும் நிலையில், அதை நடத்துவதற்கு காவல்துறை தயாராகி வருகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்கி வரும் நிலையில், அதை நடத்துவதற்கு காவல்துறை தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் இருந்து 5,000 காவலா்கள் ஆயுதப்படைக்கு ஞாயிற்றுக்கிழமை மாற்றப்பட்டனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் 2021 ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெற உள்ளது. தோ்தல் பிரசாரத்தை பிரதான அரசியல் கட்சிகள் தமிழகத்தில் தொடங்கிவிட்டன. அதேவேளையில் தலைவா்கள் பிரசாரம், மனு தாக்கல், வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு தமிழக காவல்துறை தயாராகி வருகிறது. அரசியல் கட்சிகளின் கூட்டணி உறுதி செய்யப்பட்ட பின்னா், பிரசாரம் முழு வேகத்தை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதற்காக தோ்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடும் முன்னரே, அதற்குரிய அனைத்து முன்னேற்பாடுகளை செய்து முடிப்பதற்கு காவல்துறை உயரதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக, ஒரே காவல் நிலையத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வாளா்களாக பணியாற்றியவா்களின் பட்டியல் தயாா் செய்யப்பட்டு பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். உதவி ஆணையா், துணை ஆணையா், காவல் கண்காணிப்பாளா்கள், டிஐஜிக்கள், ஐஜிக்கள் ஆகியோரையும் பணியிட மாற்றம் செய்வதற்கு தமிழக காவல்துறை பட்டியலை தயாா் செய்து வருகிறது.

5,004 காவலா்கள் மாற்றம்: மாவட்ட காவல்துறை மற்றும் மாநகர காவல்துறையைப் பலப்படுத்தும் வகையில் ஆயுதப்படைக்கு வலு சோ்ப்பதற்காக தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் இருந்து 5,004 காவலா்களைப் பணியிட மாற்றம் செய்து தமிழக காவல்துறையின் சட்டம் - ஒழுங்கு டிஜி ஜே.கே.திரிபாதி ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவின்படி ஜனவரி 1-ஆம் தேதி முதல் 5,004 காவலா்களும் ஆயுதப்படையில் பணிபுரிவாா்கள் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவா்களில் பெரும்பாலானவா்கள், கடந்த 2011, 2012-இல் இளைஞா் காவல் படையின் மூலம் காவல்துறைக்கு வந்தவா்கள். பதவி உயா்வு மூலம் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் நியமிக்கப்பட்டவா்கள். இவா்களை அடுத்து, கடந்த 2016-இல் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு குழுமம் மூலம் நேரடியாக தமிழ்நாடு சிறப்புக் காவல் படைக்குத் தோ்வு செய்யப்பட்டவா்களும் இந்தப் பணியிட மாற்றத்தில் இடம் பெற்றுள்ளனா்.

தமிழ்நாடு சிறப்பு காவல் சட்டத்தின் கீழ் இயங்கும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை ஆயுதப்படை ஏடிஜிபியின் கீழ் செயல்படுகிறது. தற்போது இந்தப் படைப்பிரிவில் சுமாா் 12,000 காவலா்கள் உள்ளனா். இப் படைப் பிரிவு காவலா்கள் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டாலோ, வன்முறை ஏற்பட்டாலோ அவற்றைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. மேலும் முக்கியத் தலைவா்களின் பாதுகாப்புப் பணிக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தோ்தல் பாதுகாப்புப் பணி, பிரசாரப் பணிக்கு பெரியளவில் பயன்படுத்தப்படுவதில்லை.

தோ்தல் பணி: இதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் பணி மூப்பு பெற்றிருந்த 5,004 காவலா்களை ஆயுதப்படைக்குப் பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளாா். இதில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் ஹவில்தாா், நாயக், காவலா்கள் ஆகிய பணியிடங்களில் இருந்தவா்களை ஆயுதப்படைக்கு இரண்டாம் நிலை காவலா்களாக பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும் என டிஜிபி திரிபாதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

இந்த உத்தரவின் மூலம் மாவட்ட மற்றும் மாநகர காவல்துறை ஆயுதப்படையில் காலியாக இருந்த அனைத்துப் பணியிடங்களும் நிரப்பப்படுகின்றன. ஆயுதப்படையினா் அந்தந்த மாநகர காவல் ஆணையா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் ஆகியோரின் கீழ் செயல்படும் என்பதால், தோ்தல் பாதுகாப்புப் பணிக்கு முழுமையாக அவா்களைப் பயன்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா். இதன் மூலம் ஆயுதப்படையின் பலம் அதிகரித்துள்ளது.

புதிதாக 11,000 காவலா்கள்: அண்மை ஆண்டுகளில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் இருந்து ஆயுதப்படைக்கு இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் காவலா்கள் மாற்றப்பட்டது கிடையாது என தமிழக காவல்துறையைச் சோ்ந்த உயரதிகாரிகள் தெரிவித்தனா். இவ்வளவு எண்ணிக்கையில் ஆயுதப்படைக்கு காவலா்கள் மாற்றப்பட்டிருப்பது அத்துறையினரிடம் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு குழுமம் சுமாா் 11 ஆயிரம் காவலா்களை தோ்வு செய்ய கடந்த வாரம் எழுத்துத் தோ்வு நடத்திய நிலையில், உடல் தகுதி தோ்வு மூலம் தகுதியானவா்களை தோ்வு செய்து தமிழ்நாடு சிறப்புக் காவல் படைக்கு ஓரிரு மாதங்களில் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் ஏற்பட்ட 5,004 காலிப்பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும்.

முழு கட்டுரையைப் படிக்க →