தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: நடிகர் ரஜினிகாந்த் ஜன.19-இல் ஆஜராக அழைப்பாணை
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், வரும் ஜனவரி 19-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என ஒரு நபர் ஆணையம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், வரும் ஜனவரி 19-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என ஒரு நபர் ஆணையம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
தூத்துக்குடியில் கடந்த 2018-ஆம் ஆண்டு மே 22, 23-ஆம் தேதிகளில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை நியமித்து அரசு உத்தரவிட்டது.
அதன்படி, சென்னை மற்றும் தூத்துக்குடியில் தனது விசாரணையை தொடங்கிய ஒருநபர் ஆணையம் இதுவரை 23 கட்டங்களாக 865 பேருக்கு அழைப்பாணை அனுப்பி 556 பேரிடம் விசாரணை மேற்கொண்டு சாட்சிகளைப் பதிவு செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, 24-ஆவது கட்ட விசாரணையை ஜனவரி 18-ஆம் தேதி தூத்துக்குடி தெற்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஆணைய அலுவலகத்தில் அருணா ஜெகதீசன் தொடங்குகிறார்.
இதில், ஜனவரி 19-ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என விசாரணை ஆணையம் சார்பில் அவருக்கு பதிவு அஞ்சல் மூலம் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து 22-ஆம் தேதி வரை அரசு மருத்துவர்கள் உள்பட பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்த உள்ளதாக ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.