முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் விவசாயிகள் புறக்கணிக்கப்படுகின்றனர்: கமல்ஹாசன்

தமிழகத்தில் விவசாயிகள், கைத்தறி நெசவாளர்கள் உள்ளிட்டோர் புறக்கணிக்கப்படுகின்றனர் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்தார்.

Updated On : 23 டிசம்பர், 2020 at 4:16 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:41 PM

தமிழகத்தில் விவசாயிகள், கைத்தறி நெசவாளர்கள் உள்ளிட்டோர் புறக்கணிக்கப்படுகின்றனர் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்தார்.
 விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மநீம தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது: ஊழலிலும், மாநிலத்தின் உரிமைகளை விட்டுக்கொடுத்திலும்தான் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் விவசாயிகள், கைத்தறி நெசவாளர்கள், நேர்மையாளர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். இந்த நிலை மாற்றப்படும்.
 வெளிநாடுகளிலிருந்து பெட்ரோலை லிட்டர் ரூ.34-க்கு வாங்கி, நமது நாட்டில் ரூ.84-க்கு விற்கின்றனர். இந்தப் பிரதமர் ஆட்சிக்கு வந்தபோது சிலிண்டர் என்ன விலை, இப்போது என்ன விலை? பிரதமர் தொலைக்காட்சியில் தோன்றினாலே, என்ன அறிவிப்பாரோ என்ற அச்சம் மக்களிடம் உள்ளது.
 விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆறு சுரண்டப்படுகிறது. பழைமை வாய்ந்த கோயில்கள், பாறை ஓவியங்கள் சிதைந்து வருகின்றன. கந்துவட்டிக் கொடுமையும், மணல் கொள்ளையும் தொடர்கிறது. இந்த நிலை வெகுநாள் நீடிக்காது என்றார் கமல்ஹாசன்.
 முன்னதாக, திருவண்ணாமலையிலிருந்து கண்டாச்சிபுரம் வழியாக விழுப்புரம் நகரினுள் திறந்த வாகனத்தில் பொதுமக்களை நோக்கி கையசைத்தபடி கமல்ஹாசன் வந்தார்.
 கடலூரில்...: தொடர்ந்து, மாலை கடலூர் வந்த கமல்ஹாசன், மநீம நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். அந்தக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
 வருமான வரி செலுத்துவது தொடர்பாக என்னிடம் வெள்ளை அறிக்கை கேட்கிறார்கள். அதை வருமான வரித் துறையிடம்தான் அவர்கள் கேட்க வேண்டும்.
 நேர்மையான ஆட்சி அமைய நல்ல தலைமை அவசியம். நாங்கள் வெளியிட்ட ஏழு அம்சத் திட்டங்களில் இல்லத்தரசிகளுக்கு ஊதியம், இளைஞர்களை தொழில் முனைவோராக மாற்றுதல் ஆகியவை முக்கியமானவை.
 பெருமைமிக்க கடலூர் துறைமுகம் சாக்கடையாக மாறிவிட்டது. இது நிர்வாகத் திறமையின்மையை வெளிப்படுத்துகிறது என்றார் அவர்.
 தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: வழியெங்கும் மக்களிடம் நாளைய தமிழகத்துக்கான எழுச்சியைக் காண முடிகிறது. அவர்கள் தொடர்ந்து எங்களை வழிநடத்த வேண்டும் என்றார்.
 நிகழ்ச்சியில், புயல், மழையால் பாதிக்கப்பட்ட சிலருக்கு நிவாரணப் பொருள்களை கமல்ஹாசன் வழங்கினார். முன்னதாக, அவர் நெல்லிக்குப்பம் பகுதியில் பிரசாரம் செய்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.