முகப்பு
தமிழ்நாடு

விஜய் ரசிகர்கள் என் மீது கோபப்பட்டு என்ன ஆகப்போகிறது? சீமான்

விஜய் ரசிகர்கள் என் மீது கோபப்பட்டு என்ன ஆகப்போகிறது? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:

விஜய் ரசிகர்கள் என் மீது கோபப்பட்டு என்ன ஆகப்போகிறது? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியாரின் 224ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் அவரது திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், நடிப்பது மட்டுமே நாடாளுவதற்கான தகுதி என்பதை நாங்கள் ஏற்கவில்லை. அது எங்கள் கோட்பாடு. மக்களுக்கானப் போராட்டக்களத்தில் நிற்பவர்களின் தியாகங்களை திரைவெளிச்சம் கொண்டு மறைப்பதை நாங்கள் ஒருபோதும் ஏற்கமுடியாது. எங்கள் முன்னவர்கள் காமராசர், கக்கன், ஜீவானந்தம், சமகாலத்தில் நல்லக்கண்ணு இவர்களை தாண்டிய அரசியல் தலைவர்கள் உண்டா? தமிழர்களுக்கு முன்மாதிரியை ஏன் வெளியில் தேட வேண்டும்? தலைவர்களே இல்லாததுபோல், எம்ஜியார் போல், ரஜினி போல், கமல் போல் வரவேண்டும் என்று ஏன் கூற வேண்டும்?

நடிகர் விஜய் என் தம்பி, அவன் மீது பேரன்பு எனக்குண்டு. குறைந்தபட்சம் தம்பி சூர்யா போல் அவரும் சமூக பிரச்னைகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். அவர் அரசியலுக்கே  வரக்கூடாது என்று கூறவில்லை. தன்னுடைய புகழ் வெளிச்சத்தை கொண்டு மக்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து, அவர்களுக்காக உடன் நின்று களத்தில் நின்று போராடி அரசியலுக்கு வாருங்கள், வெறும் திரை கவர்ச்சியை மட்டுமே வைத்து அரசியலுக்கு வராதீர்கள் என்றுதான் கூறுகிறோம். அது தம்பி விஜய்க்கும் பொருந்தும் என்றுதான் கூறுகிறோம். ஆனால் ரஜினியை நாங்கள் எதிர்ப்பது, மன்னர் காலத்தில் மராட்டியர்கள் எங்களை படையெடுத்து வந்து ஆண்டனர், மக்களாட்சி காலத்தில் ரஜினி படமெடுத்து வந்து ஆளவேண்டும் என்று நினைக்கிறார். மக்கள் எங்களை அங்கீகரித்துள்ளார்கள். உள்ளாட்சி தேர்தலில் கணிசமான வாக்கு பெற்றுள்ளோம். அங்கீகாரத்தை எதிர்பார்த்து மட்டுமே நாங்கள் அரசியல் செய்யவில்லை. மண்ணுக்கும் மக்களுக்குமான அரசியல் என்பது எங்கள் கடமை. இந்த அரசியலை செய்வது ஆன்ம அளிக்கிறது. எம்ஜியார் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்று வைகோ கூறுகிறாரென்றால் பிறகு ஏன் அவர், அதிமுகவில் சேராமல் திமுகவிலேயே இருந்தார்?

தமிழ்நாட்டில் ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லை என்பதை எதிர்க்கிறேன். ஸ்டாலின், எடப்பாடிக்கு இல்லாத தகுதி, அன்புமணி, திருமாவளவனுக்கு இல்லாத தகுதி, ரஜினிக்கு மட்டும் இருக்கிறதா? அவர் வந்துதான் அனைத்தையும் சரி செய்ய வேண்டுமா? எந்த மாநிலத்தையும் யார் வேண்டுமானாலும் ஆளலாம் என்று சொல்லும் இந்த இந்திய கட்சிகள், முதலில் தங்கள் கட்சிக்கு தமிழக தலைவர்களாக வேறு மாநிலத்தை சேர்ந்தவர்களை முடிந்தால் நியமிக்கட்டும். கட்சிக்கே மக்கள் ஏற்கமாட்டார்கள் என்றால் ஆட்சிக்கு எப்படி ஏற்க முடியும். தமிழக சட்டமன்றத்தில் 48 பேர் பிறமொழியாளர்கள் உள்ளனர். எங்களைப்போல் பேரன்பும், பெருந்தன்மையும் ஆகப்பெரும் சனநாயகமும் கொண்ட இனத்தை உலக வரலாற்றிலேயே நீங்கள் காட்டமுடியாது என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →