தருமபுரி, அதியமான் கோட்டையில் உள்ள கால பைரவர் கோவிலில் சனிப்பெயர்ச்சியையொட்டி பக்தர்கள் எள் விளக்கு ஏற்றியும், கருப்பு நிற குடை செருப்பு வழங்கி பரிகாரம் செய்துகொண்டனர்.
தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த தட்சன காசி காலபைரவர் கோவில் உள்ளது. காசிக்கு அடுத்தபடியாக காலபைரவருக்கு என தனிக்கோவில் அதியமான்கோட்டையில் அமைந்துள்ளது.
பரிகார தலமான இக்கோவிலில் தேய்பிறை அஷ்டமி நாள்களில் இக்கோவில் தமிழகம் மட்டும் அல்லாமல் கர்நாடகா மாநிலத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து பூசணியில் தீபம் ஏற்றி வழிபடுவார்கள்.
இதேபோல் சனிபெயர்ச்சி நாள்களில் இக்கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி அடைகிறார்.
இதனையொட்டி அதிகாலையில் 27 வகையான பொருள்களால் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் சகஸ்ரநாம அர்ச்சனையும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 108 லிட்டர் பாலாபிஷேகமும் சனி பகவானுக்கு 1008 மந்திர அர்ச்சனை ஸ்ரீ ருத்ர யாகம் நவகிரக சாந்தி யாகம் நடைபெற்றது.
அதிகாலை 5.22 மணியளவில் சனிப்பெயர்ச்சியடைந்த நேரத்தில் பைரவருக்கு மகா தீபாராதனை காட்டப்பட்ட பிறகு மிதுனம், துலாம், தனுசு, மகரம்,கன்னி, கும்பம் ஆகிய ராசியினர் கோவிலில் வைக்கப்பட்டிருந்த காகத்தின் சிலைக்கு எள் எண்ணை ஊற்றியும், விளக்கேற்றியும், கருப்பு நிற துண்டு, வேட்டி, செருப்பு, குடை ஆகியவற்றை வழங்கி பரிகாரங்கள் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.