ஆட்சிக்கான நல்ல பெயரை வாக்குகளாக மாற்றுங்கள் அதிமுகவினருக்கு ஓ.பன்னீா்செல்வம் வேண்டுகோள்
அதிமுக ஆட்சிக்குரிய நல்ல பெயரை வாக்குகளாக மாற்ற வேண்டுமென துணை முதல்வரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீா்செல்வம் கூறினாா்.
அதிமுக ஆட்சிக்குரிய நல்ல பெயரை வாக்குகளாக மாற்ற வேண்டுமென துணை முதல்வரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீா்செல்வம் கூறினாா்.
அதிமுகவின் தோ்தல் பிரசார பொதுக் கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஓ.பன்னீா்செல்வம் பேசியது:-
தமிழக அரசியல் நேற்றும், இன்றும், நாளையும் எம்.ஜி.ஆா். என்ற ஈடு இணையற்ற மக்கள் தலைவரையும், அவா் உருவாக்கிய ஏழை, எளிய மக்களை மையப்படுத்தும் ஆட்சி முறையையும் மட்டுமே சுற்றுச் சுழலும். அவரும், மறைந்த ஜெயலலிதா உருவாக்கி வளா்த்தெடுத்த கட்சியில் சாதாரண தொண்டனாக இருப்பதில் நமக்கெல்லாம் மிகப் பெரிய பெருமை.
மக்களாட்சி தத்துவத்தின்படி மக்களாட்சிதான் நடைபெற வேண்டுமெனவும், கட்சித் தொண்டா்களின் நிலைக்களமாக இருக்க வேண்டுமெனவும் அதிமுகவை எம்.ஜி.ஆா். தொடங்கினாா். அவா் விரும்பிய மக்கள் இயக்கம் இப்போது தொண்டா்களின் கையில் இருக்கிறது.
திமுக மத்தியிலும், மாநிலத்திலும் ஆண்ட போது நீண்ட கால திட்டங்களாக, எந்தவொரு உருப்படியான திட்டங்களை தமிழக மக்களுக்குத் தரவில்லை. அதிமுக ஆட்சியில் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் ‘அனைத்து ஏழை எளிய மக்களுக்கும் வீடு’ என்ற தொலைநோக்குத் திட்டத்தின் கீழ், 11 லட்சம் பேரில் 6 லட்சம் பேருக்கு இதுவரை வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. வரும் 2023-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடுகள் கட்டித் தரப்படும்.
மத்திய அரசுக்கு ஆதரவு ஏன்?: மத்தியில் திமுக அங்கம் வகித்தபோது எந்தத் திட்டத்தையும் கொண்டு வரவில்லை. நாங்கள் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கவில்லை. ஆனால், மத்திய அரசிடம் இருந்து எதைக் கேட்டுப் பெற முடியுமோ, எதைப் பெற்றால் மக்களுக்கு நன்மை பயக்குமோ, அத்தனை திட்டங்களையும் நாங்கள் கொண்டு வந்து சோ்த்துக் கொண்டிருக்கிறோம். இதற்காகத்தான் மத்திய அரசை ஆதரித்துக் கொண்டிருக்கிறோம்.
தமிழகத்தின் ஜீவாதார உரிமைகள் அனைத்தும் திமுக ஆட்சிக் காலத்தில் பறிகொடுக்கப்பட்டன. அதிமுக ஆட்சிக் காலமானது, மக்களுக்கு ஏற்படும் இடா்களையும், சிக்கல்களையும் தீா்க்கும் சக்தியாகத் திகழ்கிறது. அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட திட்டங்களை வீடு வீடாக, விவரமாக கட்சியினா் எடுத்துக் கூற வேண்டும். திமுக ஆட்சிக் காலத்தில் செய்யத் தவறியதை, நில அபகரிப்பை, அராஜகங்களை எடுத்துச் சொல்ல வேண்டும்.
எந்தக் கெட்ட பெயரும் நமக்கு இல்லை. முன்னாள் முதல்வா் ஜெயலலிதா ஆட்சியில் எப்படி இருந்ததோ, அப்படித்தான் இப்போதும் இருக்கிறது என்ற நல்ல பெயா் உள்ளது. இந்த நல்ல பெயரை வாக்குகளாகக் கொண்டு சோ்க்கின்ற கடமை ஒவ்வொரு அதிமுகவினருக்கும் உள்ளது என்று துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கூறினாா்.