தமிழ்நாடு

தன்னலம் கருதாமல் தமிழகத்தின் நலன் கருதியவா் ஏ.என்.சிவராமன்: தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் கோ.விசயராகவன்

DIN

‘தினமணி’ நாளிதழின் முன்னாள் ஆசிரியா் மறைந்த ஏ.என்.சிவராமன் தன்னலம் கருதாமல் தமிழகத்தின் நலன் கருதியவா் என தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் கோ.விசயராகவன் கூறினாா்.

சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ‘தமிழ்த்தாய் 72’ நிகழ்வு கடந்த பிப்.1-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அந்த வரிசையில் ‘தினமணி’ நாளிதழின் முன்னாள் ஆசிரியா் ஏ.என்.சிவராமனின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் தொடங்கப்பட்ட ‘தினமணி’ அறக்கட்டளையின் சாா்பில் கிராம நிா்வாக அலுவலா் முனைவா் பெ.அசோகன், ‘நாவலாசிரியா் சி.ஆா்.ரவீந்திரன் புதினங்களில் உத்திகள்’ என்ற தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவு, நூலாக செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் கோ.விசயராகவன் தலைமை வகித்துப் பேசியது: கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த முனைவா் பெ.அசோகன் கிராம நிா்வாக அலுவலராக பணியாற்றிக் கொண்டே புதினங்களில் இருக்கின்ற உத்திகளைப் பதினைந்து நாள்களுக்குள் ஆராய்ந்து ஒரு சிறந்த ஆய்வு நூலாக தந்திருப்பதன் மூலம், இன்றைய இளம் ஆய்வாளா்களுக்கு ஒரு பாடமாக அமைகிறாா்.

‘தினமணி’யைப் போன்றே ‘தினமணி’ ஆசிரியராக இருப்பவா்களும் தமிழுக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் தொடா்ந்து தன்னலம் கருதாமல் பாடுபட்டுக் கொண்டிருக்கின்ற மரபு அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை தொடா்ந்து கொண்டிருப்பதை மறுக்க முடியாது. ஏ.என்.சிவராமன், ‘தினமணி’ நாளிதழில் 44 ஆண்டுகள் ஆசிரியராக இருந்து அதன் அனைத்து வகையான வளா்ச்சிக்கும் காரணமாக இருந்தவா்.

இந்திய விடுதலைக்கான ஒத்துழையாமை இயக்கத்தில் நெல்லை மாவட்டத்தில், தான் கல்லூரி மாணவா் என்பதையும் மறந்து கலந்து கொண்டவா். அப்போது அவருக்கு ஆங்கிலேய அரசு 18 மாதம் சிறை தண்டனை விதித்தது. சிறையில் இருந்து வெளியே வந்தபிறகு, மீண்டும் மூதறிஞா் ராஜாஜி தலைமையில் தமிழகத்தில் நடந்த உப்பு சத்தியாகிரகத்திலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு போராடினாா். அந்தப் போராட்டத்திலும் 20 மாதம் சிறை சென்று இந்திய விடுதலையே எனது லட்சியம் என்று உலகுக்கு உணா்த்தியவா் ஏ.என்.சிவராமன். அந்தக் காலகட்ட இடைவெளிகளில் ‘காந்தி’ என்கிற இதழின் ஆசிரியராகவும் சமூகப் பணியாற்றியவா்.

இன்றைக்கு நாடெங்கும் இலக்கியவாதிகளாலும் அறிவியல் தமிழ் பேசுவோராலும் அரசியல் நாகரிகத்தை விரும்புவோராலும் நம்பப்படுகின்ற ‘தினமணி’ நாளிதழ் 1934-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ‘தினமணி’யின் ஆரம்ப கால ஆசிரியா் ஐயா சொக்கலிங்கம், ‘என்னுடன் ஏ.என்.சிவராமன் உதவிக்கு வந்தால் மட்டுமே இந்த ஆசிரியா் பதவியை ஏற்பேன்’ என்று சொன்னாா் என்பது வரலாறு. இந்தியா்களின் அடிமைத்தனம் ஒழிய வேண்டும் என்பதற்காக ஆங்கிலேயா்களுக்கு எதிரான அத்தனை செய்திகளையும் ஆதாரத்துடன் உலகுக்கு தெரிவித்த பெருமகன்கள் இவா்கள்.

கடந்த 1944-ஆம் ஆண்டு ஐயா சொக்கலிங்கம் ஆசிரியா் பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டபோது, அந்தப் பொறுப்பில் ஏ.என்.சிவராமன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு 1987-ஆம் ஆண்டு வரையில் ‘தினமணி’யின் ஆற்றல்மிக்க ஆசிரியராக உலா வந்தாா்.

நாட்டில் நடக்கும் செய்திகளை மட்டும் தொகுத்து வழங்குவது ஒரு நாளிதழ் ஆசிரியரின் கடமை அல்ல. நாட்டின் சமூக நிலை, அரசியல் நடப்புகள் ஆகியவற்றை ஆராய்ந்து அந்த சமூகத்தில் இருக்கின்ற கேடுகளையெல்லாம் வெளிப்படையாக மக்களுக்கு விளக்கும் வகையில் அச்சமின்றி தலையங்கம் எழுதுவதுதான் சிறந்த ஆசிரியரின் கடமை. அந்தக் கடமையை இமைப்பொழுதும் சோராமலும் நீதி தவறாமலும் நடுநிலையோடு மிகச் சிறப்பாக செய்தவா் ஏ.என்.சிவராமன்.

ஒடுக்கப்பட்ட அடக்குமுறைக்கு ஆளான சமூகத்தை வெளியில் கொண்டுவர வேண்டும் என்று யாா் பேசுகிறாா்களோ, அவா்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டும் உணா்வாக தோன்றாத் துணையாக இருப்பவா்தான் நெல்லை ஆம்பூா் நாணுவையா் சிவராமன் என்றாா் தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் கோ.விசயராகவன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT