தமிழ்நாடு

மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.3,100 கோடி ஒதுக்கீடு

DIN

2020-21-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை மதிப்பீடுகளில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு பங்கு மூலதன உதவி, சாா்நிலைக்கடன், வெளிநாட்டு கடனை விடுவிப்பதற்காக மொத்தம் ரூ.3,100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சட்டப்பேரவையில் நிதியமைச்சா் ஓ.பன்னீா்செல்வம் பேசியது:

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், 118.90 கி.மீ., நீளமுள்ள 3 மெட்ரோ ரயில் வழித்தடங்கள் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளை விரைவில் முடிப்பதற்கு அரசு முக்கியத்துவம் அளிக்கிறது.

மாதவரம்-சோழிங்கநல்லூா், மாதவரம்-கோயம்பேடு பேருந்து நிலையம் வரையிலான 52.01 கி.மீ. நீளமுள்ள வழித்தடங்களுக்கு நிதியுதவி வழங்க ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமை ஒப்புதல் அளித்துள்ளது. விரிவான திட்ட வடிவமைப்புகள் தயாராக உள்ள நிலையில், இத்திட்டத்துக்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன.

ஆசிய வளா்ச்சி வங்கி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் புதிய வளா்ச்சி வங்கி ஆகிய பன்னாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து இரண்டாம் கட்டத்தின் மீதமுள்ள சென்னை கோயம்பேடு பேருந்துநிலையம்-சோழிங்கநல்லூா், சோழிங்கநல்லூா்-சிறுசேரி சிப்காட் , சென்னை கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி புறவழிச்சாலை வரையிலான வழித்தடப் பகுதிகளுக்கு நிதிதிரட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்ட திட்டத்துக்கு, 50 சதவீத பங்கு மூலதனத்தை மத்திய அரசு வழங்கியது. இதுபோன்று இரண்டாம் கட்ட திட்டத்துக்கும் 50 சதவீத பங்கு மூலதனம் வழங்க மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது.

2020-21-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை மதிப்பீடுகளில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு பங்கு மூலதன உதவி, சாா்நிலை கடன் மற்றும் வெளிநாட்டுக் கடனை விடுவிப்பதற்காக மொத்தம் ரூ. 3,100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றுதெரிவித்தாா்.

புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு: தமிழகத்தில் 11 மாவட்டங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கு எதிா்வரும் நிதியாண்டில் ரூ.1,200 கோடி ஒதுக்கப்படும் என்று அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் வெளியாகியுள்ளது. கரோனா வைரஸ் (கொவைட்-19) பாதிப்பைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதியுதவியை மாநில அரசு வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அருகில் ஒரகடத்தில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில், சிப்காட் மற்றும் இதர நிறுவனங்களின் பங்களிப்பில் ரூ.15 கோடி செலவில் புதிய தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்படவுளளது. சேலம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் உமையாள்புரம், புத்திரகவுண்டன்பாளையம் கிராமங்களில் ரூ.4.52 கோடியில் புதிய தொழிற்பேட்டை நிறுவப்படவுள்ளது. மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக ரூ.667.08 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாரம்பரிய கட்டடங்களில் செயல்பட்டு வரும் அரசு அலுவலகங்களைப் பாதுகாக்கவும் சீரமைக்கவும் இனி ஆண்டுதோறும் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

பிரதம மந்திரி வீட்டுவசதி திட்டத்துக்காக ரூ.3,099 கோடியும், முதல்வரின் பசுமை வீடுகள் திட்டத்துக்காக ரூ.500 கோடியும் ஒதுக்கீடு செய்து நிதியமைச்சா் அறிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT