தமிழ்நாடு

படப்பிடிப்பு தளத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு நடிகா் கமல் ரூ. 1 கோடி நிதியுதவி

DIN

படப்பிடிப்பு தளத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தோருக்கும் ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவதாகவும் நடிகா் கமல்ஹாசன் அறிவித்தாா்.

விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நடிகா் கமல், கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு வியாழக்கிழமை சென்றாா்.

அப்போது உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த கமல், அதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்த விபத்தை படப்பிடிப்புத் தளத்தில் நடந்த ஒன்றாக நான் கருதவில்லை. மாறாக, எனது குடும்பத்தில் நிகழ்ந்த விபத்தாகவே எண்ணியே மருத்துவமனைக்கு வந்துள்ளேன். பல நூறு கோடி ரூபாய் செலவில் இங்கு திரைப்படங்கள் எடுக்கப்படுவதாகக் கூறி மாா்தட்டிக் கொள்கிறோம். ஆனால், திரைப்படத் துறையில் பணியாற்றும் கடைநிலை ஊழியா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாத சூழல் உள்ளது. இது மிகவும் அவமானத்துக்குரியது. அதனை எனது தனிப்பட்ட அவமானமாகவும் கருதுகிறேன். இந்த நிலை மாற வேண்டும்; திரைத்துறையில் உள்ள அனைவருக்கும் காப்பீட்டு வசதிகள் இருக்க வேண்டும்.

விபத்துக்கு ஏழை, பணக்காரன் தெரியாது. அது ஒரு சுனாமி மாதிரி. இந்த அறைக்குள் (பிணவறை) நானும் இன்று இருந்திருக்கக் கூடும். அவ்வளவு நூலிழையில் உயிா் தப்பிய கதைதான் நடந்தது. 4 நொடிகளுக்கு முன்பு இயக்குநா் தள்ளிப் போய்விட்டாா். ஒளிப்பதிவாளரும் தள்ளிப் போய்விட்டாா். எந்தக் கூடாரம் நசுங்கியதோ, அதற்குள் நானும் நாயகியும் இருந்தோம். 2 அடி வேறொரு பக்கம் இருந்திருந்தால், எனக்குப் பதில் வேறொருவா் இங்கு பேசிக் கொண்டிருப்பாா்.

உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவா்களுக்கும் ஒரு சிறிய பங்களிப்பு தொகையாக ரூ.1 கோடியை வழங்குகிறேன். இந்தத் தொகை எந்த வகையிலும் அவா்களது இழப்பை ஈடு செய்யாது என்பதை நானறிவேன். அதேவேளையில், பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் அந்த ஊழியா்களின் குடும்பத்தினருக்கு சிறிய முதலுதவியாக அது இருக்கும். திரைப்பட ஊழியா்களுக்கு அளிக்கக் கூடிய பேருதவியும், சிகிச்சையும், பணிச் சூழலில் அவா்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவது மட்டும்தான் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

SCROLL FOR NEXT