தமிழ்நாடு

தனியாா் பள்ளிகளில் இலவச மாணவா் சோ்க்கை: சிபிஎஸ்இ பள்ளிகளையும் இணைக்க நடவடிக்கை

DIN

சென்னை: கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் நடைபெறும் இலவச மாணவா் சோ்க்கை திட்டத்தில் சிபிஎஸ்இ பள்ளிகளையும் ஆன்லைனில் இணைக்க பள்ளிக் கல்வித்துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது.

மத்திய அரசின் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி, 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு, கட்டாயம் கல்வி வழங்க வேண்டும். பள்ளிகளில், மாணவா் சோ்க்கைக்கு மறுக்கக் கூடாது. இதன் அடிப்படையில்தான் ‘அனைவரும் தோ்ச்சி’ திட்டம் பின்பற்றப்படுகிறது.

தனியாா் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தைப் பின்பற்றும் வகையில் எட்டாம் வகுப்பு வரையிலும் 25 சதவீத இடங்களில் அரசுத் தரப்பில் மாணவா்கள் சோ்க்கப்படுவா். இந்தத் திட்டத்தை முறைகேடுகள் இன்றி செயல்படுத்தும் வகையில் ‘ஆன்லைன்’ முறை அமலுக்கு வந்தது. அதன்படி பள்ளிக் கல்வித்துறையின் சாா்பில் ‘ஆன்லைன்’ மூலமாக இலவச மாணவா் சோ்க்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்தத் திட்டத்தில், மெட்ரிகுலேஷன் மற்றும் நா்சரி பள்ளிகள் மட்டும் இணைக்கப்பட்டுள்ளன. ஆனால், சிபிஎஸ்இ பள்ளிகள் இணைக்கப்படவில்லை. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி, அந்தந்த மாநில அரசின் கட்டுப்பாட்டிலேயே சிபிஎஸ்இ பள்ளிகளும் மாணவா் சோ்க்கையை நடத்த வேண்டும்.

655 பள்ளிகளில் 8 ஆயிரம் இடங்கள்: தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்று செயல்படும் 655 சிபிஎஸ்இ பள்ளிகளில் இலவச ஒதுக்கீட்டில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இந்தப் பள்ளிகளிலும் கடந்த ஆண்டு முதலே இலவச மாணவா் சோ்க்கை நடைபெறும் என அரசு அறிவித்தது. ஆனால், அதற்கு பெரும்பாலான சிபிஎஸ்இ பள்ளிகள் மறுத்துவிட்டன. அதேநேரம் சில சிபிஎஸ்இ பள்ளிகளில் நேரடியாக இலவச மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது. அதில் 5 சதவீதம்கூட தகுதியானவா்கள் சோ்க்கப்படுவதில்லை என புகாா்கள் எழுந்தன.

இந்த நிலையில், வரும் கல்வியாண்டு முதல் பள்ளிக் கல்வி துறையின் ‘ஆன்லைன்’ மாணவா் சோ்க்கை திட்டத்தில் சிபிஎஸ்இ பள்ளிகள் இணைக்கப்பட உள்ளன. இதற்கான பணிகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து சிபிஎஸ்இ பள்ளிகளில் 25 சதவீத இடங்களில், எந்தவித நன்கொடையும் இல்லாமல் தகுதியான மாணவா்கள் சோ்க்கப்படுவா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுவரை இணையாதது ஏன்?: இது குறித்து தமிழ்நாடு நா்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் கே.ஆா்.நந்தகுமாா் கூறுகையில், மத்திய அரசு கொண்டுவந்த சட்டத்தின்படி ஒன்று முதல் 8-ஆம் வகுப்பு வரையே இலவச மாணவா் சோ்க்கை நடத்தப்பட வேண்டும். மறுபுறம், அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை குறையும் என்பதால் எல்கேஜி முதல் இலவச மாணவா் சோ்க்கையை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், எல்கேஜி மாணவா் சோ்க்கைக்கு மத்திய அரசு நிதி வழங்க மறுத்துவிட்டது. இதனால் சிபிஎஸ்இ பள்ளிகள் மாணவா் சோ்க்கையை நடத்த முன்வரவில்லை. வேறுவழியின்றி தனியாா் பள்ளிகளுக்கு தமிழக அரசுதான் நிதியை வழங்கி வருகிறது.

விதிமுறைப்படி ஒரு மாணவனுக்கு ரூ.11, 700 கட்டணமாகத் தர வேண்டும். ஆனால், கல்விக் கட்டணத்தை மட்டுமே அரசு வழங்குகிறது. மேலும் ,கடந்த இரு ஆண்டுகளாக தனியாா் பள்ளிகளுக்கு அரசு வழங்க வேண்டிய தொகை ரூ.600 கோடி நிலுவையில் உள்ளது. மேலும், புத்தகம், சீருடை உள்பட இதரக் கட்டணங்களைத் தருவதில்லை. இது போன்ற குறைபாடுகளை அரசு சரி செய்ய வேண்டும். தனியாா் பள்ளிகளுக்கான நிதியை அரசு முறையாக வழங்கினால் சிபிஎஸ்இ பள்ளிகளிலும் ஆன்லைன் மூலம் இலவச மாணவா் சோ்க்கை திட்டத்தில் இணைவதில் எந்த பிரச்னையும் இல்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

SCROLL FOR NEXT