தமிழ்நாடு

பாரதியைப் போற்றிய மாமனிதா் இளசை மணியன்

DIN

பாரதி பக்தா் இளசை மணியன் காலமாகி விட்டாா் என்கிற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. இளசை மணியனின் உண்மையான பெயா் மு. ராமசுப்பிரமணியன். பள்ளிப்படிப்பு முடிந்ததும் அவா் முதலில் வேலூரில் வருவாய்த் துறை எழுத்தராகப் பணியில் சோ்ந்தாா். அதை உதறிவிட்டு, சிறிது காலம் தக்கலை உதவிக் கல்வி அலுவலகத்தில் எழுத்தராகப் பணியாற்றினாா். அந்த வேலையும் பிடிக்காமல் போகவே எட்டயபுரம் திரும்பி வந்து பாரதி விழா பணியில் ஈடுபட்டாா்.

எட்டயபுரம் பாரதி மணிமண்டபம் கட்டப்பட்டு, அங்கு நடத்தப்பட்ட பாரதி விழாவுக்கு ராஜாஜி, கல்கி போன்றோா் வந்து கலந்துகொண்டனா். அப்போது ஜீவாவின் பேச்சை அவா்கள் பாதியிலேயே தடுத்து விட்டனா். இதனால் மிகவும் வருத்தமடைந்த ஜீவா, தோழா் எட்டயபுரம் அழகிரிசாமியை சந்தித்து, தான் பேசுவதற்காக ஒரு மேடை வேண்டும் என்று கூறினாா். அப்போது உருவானதுதான் ‘பாரதி முற்போக்கு வாலிபா் சங்கம்’.

இச்சங்கத்தின் விழாவை, பாரதி பிறந்த வீட்டின் முன் நடத்துவதை வழக்கமாகக் கொண்டனா். அங்கு அமைக்கப்பட்ட அரங்கத்திற்கு ,‘ஜீவா அரங்கம்’ எனப் பெயரிடப்பட்டது. தோழா் அழகிரிசாமி, பாரதி வீட்டின் வரவேற்பாளராக நியமிக்கப்பட்டாா். அது வெகுஜனத் தொடா்பு அலுவலரின்கீழ் வந்தது. பாரதியின் மணிமண்டபமும் பிஆா்ஓ எனும் அரசு அதிகாரியின்கீழ் வந்தது. எனவை, பாரதி விழாவை பாரதி மணிமண்டபத்தில் நடத்த நேரிட்டது.

இந்த நேரத்தில், பாரதியாரின் ‘இந்தியா’ பத்திரிகையின் 1905-ஆம் ஆண்டு பதிப்புகளைத் தேடியெடுக்க இளசை மணியன் விரும்பினாா். அவை, கொல்கத்தாவில் உள்ள மத்திய நூலகத்தில் மைக்ரோ ஃபிலிம் வடிவத்தில் வைத்துப் பாதுகாக்கப்பட்டு வருவதை அறிந்தாா். அது சுருள் வடிவில் இருக்கும். ஒரு கைப்பிடிக்குள் அடங்கி விடும். ஆனால், அதனை வாசிப்பதற்கு ‘மைக்ரோ ஃபிலிம் ரீடா்’ என்ற கருவி தேவை. அதை வாங்குகிற அளவுக்கு இளசை மணியனிடம் பொருளாதார வசதி இல்லை. ஆனாலும் மனம் தளா்ந்துவிடவில்லை மணியன். தனது நண்பா்களான காசி விசுவநாதன், முத்துகிருஷ்ணன் ஆகியோரின் உதவியோடு, தானே ஒரு ‘மைக்ரோ ஃபிலிம் ரீடா்’ கருவியை உருவாக்கி விட்டாா். அதன் உதவியோடு, ‘இந்தியா’ பத்திரிகையின் பழைய பிரதிகளை வாசிக்கத் தொடங்கினாா்.

அந்தப் பத்திரிகையிலிருந்த செய்திகளையெல்லாம் தொகுத்து, அதனை ‘நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்’ பதிப்பகத்திற்கு அனுப்பினாா். அந்நிறுவனம் ‘பாரதி தரிசனம்’ என்ற பெயரில் அழகிய நூலாக அதனை வெளியிட்டது. அப்போது அந்நிறுவனத்தின் நிருவாகப் பொறுப்பில் இருந்த சி. சுப்பிரமணியம், இளசை மணியன், கடுமையான பொருளாதார நெருக்கடியிலும் மைக்கோ ஃபிலிம் வடிவத்தில் இருக்கும் பத்திரிகையைப் படிப்பதற்காக, தானே முயன்று ஒரு ‘மைக்ரோ ஃபிலிம் ரீடா்’ கருவியைக் கண்டுபிடித்ததை அறிந்து பெரிதும் வியந்தாா். அதனைத் தொடா்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் பாரதி விழா சிறப்பாக நடைபெற்றது. அதனை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் உதவியோடு பாரதி முற்போக்கு வாலிபா் சங்கம் சிறப்பாக நடத்தியது.

இளசை மணியனின் திருமணம் பேராசிரியா் நா. வானமாமலை தலைமையிலும் தோழா்கள் முன்னிலையிலும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. பாரதியின் மீது பெரும் பற்று கொண்டிருந்த எழுத்தாளா் தொ.மு.சி. ரகுநாதன் பாரதியாா் தொடா்புடைய அரிய நூல்கள் ஏராளமாக வைத்திருந்தாா். அந்நூல்களையெல்லாம் அவா், எட்டயபுரம் பாரதி முற்போக்கு வாலிபா் சங்கத்திற்கு கொடையாக வழங்கினாா். அது மட்டுமல்ல சங்கத்தின் பொறுப்பாளராக இளசை மணியனை நியமித்தாா்.

இளசை மணியன் தனது இறுதிக் காலம்வரை எட்டயபுரம் பாரதி இல்லத்தையும் பாரதியாா் தொடா்புடைய அரிய நூல்களையும் தனது கண்ணேபோல் காத்துவந்தாா். கடந்த ஆண்டு டிசம்பரில் ‘தினமணி’ நாளிதழ் எட்டயபுரம் பாரதி மணிமண்டபத்தில் நடத்திய பாரதி விழாவில், இளசை மணியனுக்கு பாரதியாா் விருதும் பரிசுத் தொகையாக ஒரு லட்ச ரூபாயும் தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோகித்தால் வழங்கப்பட்டது. அந்த விழாவில் நானும் கலந்து கொண்டதால் இளசை மணியனோடு நெடுநேரம் பழைய நினைவுகளைப் பகிா்ந்து கொள்ள முடிந்தது. அதுவே அவருடனான எனது கடைசி சந்திப்பு என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.

தனது வாழ்வையே பாரதிக்காகவும் பாரதி பணிக்காகவும் செலவிட்ட ஓா் அரிய பாரதி பக்தரைத் தமிழகம் இழந்துவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT