தமிழ்நாடு

கூத்தாநல்லூர்: கால்நடைகளுக்கு இலவசமாக மாட்டுக் கொட்டகை கட்டித்தரப்படும் - உதவி இயக்குநர் தகவல்

DIN

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் கால்நடை மருத்துவமனையில் 2,200 கோழிக் குஞ்சுகள் உதவி இயக்குனர் வழங்கினார். மேலும், கால்நடைகளுக்கு இலவசமாக மாட்டுக் கொட்டகைக் கட்டித்தரப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் - மன்னார்குடி பிரதான சாலையில் அமைந்துள்ள, கால்நடை மருத்துவமனையில், வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு, கோழிக்குஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி, செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கால்நடை மருத்துவமனை வளாகத்தில், சமூக இடைவெளியுடன், முகக் கவசம் அணிந்தபடி நடைபெற்ற, நிகழ்ச்சிக்கு, மன்னார்குடி கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குனர் மருத்துவர் ஜான்சன் சார்லஸ் தலைமை வகித்தார். கொத்தங்குடி ஊராட்சி மன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகிதார். 

நிகழ்ச்சியில், கூத்தாநல்லூர் நகராட்சி, கொத்தங்குடி, திருராமேஸ்வரம், வக்ராநல்லூர், ஓவர்ச்சேரி, வேளுக்குடி, மணக்கரை, பூந்தாழங்குடி, வடபாதிமங்கலம், கீழ மணலி, அரிச்சந்திரபுரம், சித்திரையூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள 84 குடும்பங்களுக்கு, ஒரு குடும்பத்திற்கு தலா 25 கோழிக் குஞ்சுகள் என 2,200 கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டன. 

அப்போது, கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் மருத்துவர் ஜான்சன் சார்லஸ் கூறியது. 

புழக்கடையில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழி வளர்ப்பு, கிராம மக்களின் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகவே கருதப்படுகிறது. நாட்டுக்கோழிகள் பெரும்பாலும் இறைச்சிக்காகவும், பொழுது போக்கிற்காகவும் வளர்க்கப்படுகின்றன. குடும்பத் தேவை போக மீதியுள்ள முட்டைகள் தான் குஞ்சு பொரிக்கப் பயன்படுத்தப் படுகின்றன. நாட்டுக் கோழிகள் எந்தச் சூழ்நிலையிலும் வளரக் கூடிய திறன் கொண்டவை. நாட்டுக் கோழிகள் எவ்வித இடுப்பொருள்கள் இல்லாமலும் அல்லது குறைந்த இடுப்பொருட்கள் கொண்டும் வளர்க்கப்படுகின்றன. 

தமிழக முதல்வரின் சிறப்புத் திட்டமான விலையில்லா கோழி வழங்கும் திட்டத்தில், ஊரக புறக்கடை  கோழி வளர்ப்புத் திட்டத்தின் படி, இன்று 84 பேருக்கு, தலா 25 கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளன. 4 வாரங்களின் வயது கொண்ட ஒவ்வொரு கோழிக் குஞ்சும் ரூ.25 மதிப்புடையது. கோட்டூர், மன்னார்குடி, முத்துப்பேட்டை, நீடாமங்கலம் உள்ளிட்ட இடங்களில் ஏற்கெனவே வழங்கப்பட்டுவிட்டன. 

தற்போது, லெட்சுமாங்குடி கால்நடை மருந்தகத்திற்குட்பட்ட 84 பேருக்கு, 2,200 கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளன. கோழியை நல்ல முறையில் வளர்த்தால், 4 அல்லது 5 மாதங்களில் முட்டை இடும். முட்டையை சேகரித்து வைத்து, அடைக்காத்து வைத்தால், இன்னும் அதிக அளவில் கோழிகள் பெருகும். கோழிப் பண்ணை வைக்கும் அளவுக்கு தொழிலை அபிவிருத்தி செய்யலாம். கிராமப் புறங்களில் கூட்டு முயற்சியிலும் ஈடுபட்டு பயன் அடையலாம். கால்நடைகள் பகல் முழுக்க வெய்யிலில் இருந்து விட்டு, இரவில் மழையில்  நனையக் கூடாது. 

திருவாரூர் மாவட்டத்தில் பல இடங்களில், கால்நடைகளுக்கு கொட்டகை கிடையாது. மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் இலவசமாக, கொட்டகைக் கட்டித் தரப்படும். ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட எந்த கால்நடைகள் வைத்திருந்தாலும் அதற்கேற்றபடி கட்டித் தரப்படும். சொந்தமான இடத்தை மட்டும் காட்டினால் போதும். அதற்குரிய விண்ணப்பப் படிவங்கள், அந்தந்த கால்நடை மருந்தகங்களில் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் விண்ணப்பிக்கும் போதும், மாவட்ட ஆட்சியரின் நிதி ஒதுக்கீட்டிற்கு ஏற்றார் போல், ஊராட்சிகளுக்குக் கொட்டகை அமைக்கக் கோரி நிதி ஒதுக்கப்படும். 

ஒரு கால்நடை வைத்திருந்தாலும் அதற்கேற்றபடி நிதி ஒதுக்கப்படும். தகுதியான விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து, இருக்கும் நிதிக்குத் தகுந்தபடி, ஊராட்சி மன்றங்களுக்கு ஒதுக்கப்படுகிறது. வரவில்லையே என நினைக்க வேண்டாம். அனைவருக்கும்  வழங்கப்படும் என்றார். நிகழ்ச்சியில், கால்நடை உதவி மருத்துவர்கள் லெட்சுமாங்குடி மகேந்திரன், உள்ளிக்கோட்டை, அரிச்சந்திரபுரம் (பொறுப்பு) கார்த்திக், ஆய்வாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராமச்சந்திரன் மற்றும் பராமரிப்பு உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

5 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT