தமிழ்நாடு

கரோனாவுக்கு தனியார் மருத்துவமனை சிகிச்சை கட்டணம்: ஐஎம்ஏ பரிந்துரையும் அரசின் உத்தரவும்

DIN

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள் அதிகபட்சமாக வசூலிக்கும் தொகையாக இந்திய மருத்துவக் கவுன்சிலின் தமிழ்நாடு பிரிவு பரிந்துரைத்த தொகைக்கும், தமிழக அரசு இன்று பிறப்பித்த தொகைக்கும் பெரிய அளவில் வேறுபாடு உள்ளது.

தனியார் மருத்துவமனையில் கரோனா பாதித்து அறிகுறி இல்லாத மற்றும் லேசான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 23 ஆயிரத்தை வசூலிக்கலாம் என்று இந்திய மருத்துவக் கவுன்சில் பரிந்துரை செய்திருந்தது. ஆனால் தமிழக அரசு நிர்ணயித்திருக்கும் தொகை ரூ.7,500. 

அதேபோல கரோனா பாதித்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.43 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கலாம் என்று இந்திய மருத்துவக் கவுன்சில் பரிந்துரைத்த நிலையில், தமிழக அரசோ நாள் ஒன்றுக்கு (அதிகபட்சமாக) ரூ.15 ஆயிரத்தை கட்டணமாக வசூலிக்கலாம் என்று உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய அதிகபட்சக் கட்டணம் தொடர்பான உத்தரவை தமிழக அரசு இன்று வெளியிட்டது.

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பிறப்பித்த உத்தரவு குறித்து தமிழக நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தகவல் அளித்துள்ளார்.

அதில், தமிழக அரசு கரோனா நோய் தொற்று தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 03.06.2020 அன்று இவ்வரசு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கரோனா நோய் தொற்றுக்கு கட்டணமில்லாமல் சிகிச்சைகள் அளிப்பது குறித்து ஒர் ஆணை வெளியிடப்பட்டது.

தவிர, இந்திய மருத்துவச் சங்கம் தமிழ்நாடு கிளை நிர்வாகிகள் கரோனா நோய் தொற்று கண்ட நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய கட்டணம் தொடர்பாக சில கோரிக்கைகளை அரசின் முன் வைத்தனர்.

இதனைத் தொடார்ந்து, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு தனியார் மருத்துவமனையில் கரோனா நோயாளிகளிடமிருந்து பெற  அனுமதிக்கப்படவேண்டிய தினசரி கட்டணங்கள் மற்றும் நிபந்தனைகள் குறித்து தனது அறிக்கையினை அரசிடம் அளித்தது. இவ்வறிக்கையை கவனமுடன் ஆய்வு செய்த தமிழ்நாடு அரசு, மக்கள் நலன் கருதி கீழ்காணும் கட்டணங்களை நிர்ணயிக்கவும் சில நிபந்தனைகளை விதிக்கவும் உத்தேசித்து அவ்வாறே உத்தரவிடுகிறது.

அறிவிக்கப்பட்டுள்ள இக்கட்டணங்கள் அதிகபட்ச கட்டணமாகும். இக்கட்டணத்திற்கு மேலான தொகையை நோயாளிகளிடமிருந்து வசூலிக்க கூடாது. கரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள உலகளாவிய மருத்துவ பேரிடர் காலத்தில் அரசு மருத்துவமனைகளும், தனியார் மருத்துவமனைகளும் இணைந்து செயல்படும். இதுபோன்ற மக்கள் நலன் காக்கும் நடவடிக்கைகளின் மூலம் கரோனா சிகிச்சை முறைகள் மேலும் வலுப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்திய மருத்துவக் கவுன்சிலின் தமிழ்நாடு பிரிவு பிறப்பித்த பரிந்துரையை தமிழக அரசு ஏற்கவில்லை என்பது கண்கூடாகத் தெரிகிறது.

ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு மாநில அரசுகள் கட்டண வரைமுறை உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை செய்துள்ளன.

இந்த நிலையில், தமிழகத்தில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள் எவ்வளவு கட்டணம் வசூலிக்கலாம் என்பது குறித்து தமிழக அரசுக்கு இந்திய மருத்துவக் கழகத்தின் தமிழகப் பிரிவு பரிந்துரை செய்திருந்தது.

அதில், கரோனா தொற்று ஏற்பட்டு லேசான பாதிப்புள்ள கரோனா நோயாளிகளுக்கு (10 நாள்களுக்கு சிகிச்சை அளிக்க) ரூ.2,31,820ஐ கட்டணமாக வசூலிக்கலாம். அதன்படி ஒரு நாளைக்கு 23 ஆயிரம் ரூபாயை கட்டணமாக வசூலிக்கலாம். சிகிச்சை அளிக்கும் மருத்துவப் பணியாளர்களை தனிமைப்படுத்துவது உள்ளிட்ட செலவினங்களுக்காக ரூ.9,600 வரை கட்டணமாக வசூலித்துக் கொள்ளலாம்.

அதேபோல, கரோனா தொற்று ஏற்பட்டு கடும் பாதிப்பு இருக்கும் நோயாளிகளுக்கு அல்லது தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கும் நோயாளிகளுக்கு (17 நாள்களுக்கு) ரூ.4,31,411-ஐ கட்டணமாக வசூலிக்கலாம். நாள் ஒன்றுக்கு எனக் கணக்கிட்டால் ரூ.43 ஆயிரத்தை கட்டணமாக வசூலிக்கலாம். சிகிச்சை அளிக்கும் மருத்துவப் பணியாளர்களை தனிமைப்படுத்துவது உள்ளிட்ட செலவினங்களுக்காக ரூ.9,600 வரை கட்டணமாக வசூலித்துக் கொள்ளலாம். இந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கான ஆலோசனைக் கட்டணம் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருத்துறைப்பூண்டி கிழக்குக் கடற்கரை புறவழிச் சாலையில் ஒளிரும் விளக்குகள் வசதி

தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள்!

ரஷியாவிடமிருந்து காா்கிவ் பகுதிகள் மீட்பு: உக்ரைன்

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குரங்குகள் பிடிப்பு

SCROLL FOR NEXT