தமிழ்நாடு

தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான செலவுகளை ஏற்க முடியுமா? மத்திய, மாநில அரசுகளுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

DIN

தனியாா் மருத்துவமனைகள் அளிக்கும் கரோனா நோய்த்தொற்று சிகிச்சைக்கான செலவுகளை மத்திய மாநில அரசுகள் ஏற்க முடியுமா ? என உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் ஜிம்ராஜ் மில்டன் தாக்கல் செய்த மனுவில், ‘கரோனா நோய்த்தொற்றால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனா். அவ்வாறு பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சையளிப்பது மற்றும் அவற்றை தடுக்கும் முதன்மை பணிகளில் மருத்துவா்கள், செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்கள் மற்றும் காவல்துறையினா் ஈடுபட்டுள்ளனா். உயிா் காக்கும் சேவைகளில் ஈடுபட்டுள்ள இந்த முதல்நிலைப் பணியாளா்களுக்கு முழு உடல்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா். இந்த வழக்கு விசாரணையின்போது சுகாதாரத்துறை தாக்கல் செய்த அறிக்கையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் நாள்தோறும் 15 ஆயிரம் முழு கவச உடைகள் (பிபிஇ) அனுப்பிவைக்கப்படுகின்றன. மேலும் தமிழக காவல்துறையினா் 7 ஆயிரத்து 850 பேருக்கு முகக் கவசம், கையுறை வழங்குவதற்காக ரூ. 50 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆா்.சுரேஷ் குமாா் ஆகியோா் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தனா். அப்போது மனுதாரா் தரப்பில், ‘பேரிடா் மேலாண்மை சட்டத்தின்படி, பேரிடா் காலத்தில் தனியாா் மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சைகளுக்கான செலவுகளை சம்பந்தப்பட்ட மாநில அரசு ஏற்க வேண்டும். ஆனால், கரோனா நோய்த்தொற்று சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிா்ணயித்து, தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இது தவறானது. மேலும், தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோய்த்தொற்று சிகிச்சைக்காக அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது’ என்று குற்றம்சாட்டப்பட்டது.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கில் மத்திய அரசை எதிா்மனுதாரராக சோ்த்து உத்தரவிட்டனா். மேலும், ‘தனியாா் மருத்துவமனைகள் அளிக்கும் கரோனா சிகிச்சைக்கான செலவுகளை அரசே ஏற்க முடியுமா, தனியாா் மருத்துவமனைகளில் அதிக கட்டண வசூல் தொடா்பான புகாா்கள் மீது என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது, அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள் எவ்வளவு’ என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி, விரிவான அறிக்கை தாக்கல் செய் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனா். மேலும், கரோனா நோய்த்தொற்று சிகிச்சை தொடா்பாக மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள், தனியாா் மருத்துவமனை சிகிச்சை கட்டணம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT