மணல் குவாரி, சிவகங்கை மாவட்டம் 
தமிழ்நாடு

அரசு உத்தரவால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து குவாரிகளும் மூடல்

தமிழக அரசின் உத்தரவால் சிவகங்கை மாவட்டம் முழுவதும் 40 க்கும் மேற்பட்ட சவடு, கிராவல் உள்ளிட்ட பல குவாரிகள் மூடப்பட்டதால் நீராதாரங்கள் காப்பாற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

DIN

தமிழக அரசின் உத்தரவால் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி உள்பட சிவகங்கை மாவட்டம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட சவடு, கிராவல் உள்ளிட்ட பல குவாரிகள் மூடப்பட்டதால் நீராதாரங்கள் காப்பாற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் கட்டுமானப் பணிகளுக்கு மணல் கிடைக்காமல் திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் செயல்பட்டு வந்த மணல் குவாரிகளிலிருந்து லாரிகளில் மணல் கொண்டு வரப்பட்டு கட்டுமானப் பணிகள் நடந்து வந்தது. கூடுதல் விலை கொடுத்து மணல் வாங்க முடியாதவர்கள் எம்-சாண்ட் மணலை வைத்து கட்டுமானப் பணிகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில் கடந்த இரு மாதமாக சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் ஆற்று மணல் கிடைக்கும் பகுதியை ஒட்டி சவடு மண் கிடைக்கும் பகுதிகளில் சவடு மண் குவாரி அமைக்க தனியார் நிலங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது. குவாரி நடத்துபவர்கள் இந்த உரிமத்தை வைத்துக்கொண்டு சவடு மண்ணுக்கு 3 அடி கீழே கிடைக்கும் ஆற்று மணலை 30 அடி ஆழம் வரை ராட்சத பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு தோண்டி சிவகங்கை மாவட்டம் உள்பட பிற மாவட்டங்களுக்கும் விற்பனை செய்து வந்தனர்.

இந்த குவாரிகளில் பாதுகாப்பு பிரச்னைக்காக வெளிமாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட அடியாட்களும் பயன்படுத்தப்பட்டனர். விதிமுறைகளை மீறி சவடு மண் குவாரியில் நடக்கும் ஆற்று மணல் கொள்ளையை தடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு புகார் மனு அனுப்பினார். மேலும் இக்கட்சி சார்பில் பல கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இருந்தாலும் சவடு மண் குவாரிகளிலிருந்து தொடர்ந்து ஆற்று மணல் எடுத்து கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்தன. மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் சவடு மண் குவாரி செயல்படும் தனியார் நிலங்களை ஒட்டியுள்ள வைகையாற்றுப் பகுதியிலும் துணிச்சலாக இரவு நேரங்களில் மணல் அள்ளி கடத்தப்பட்டது. இவ்வாறு கடத்தல் மணல் 5 யூனிட் தூரத்தைப் பொருத்து ரூ 45 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.

இந்த குவாரிகளால் மேற்கண்ட பகுதிகளில் நிலத்தடி நீராதாரம் குறைந்து பாசனக் கிணறுகளும் குடிநீர் திட்ட கிணறுகளும் வறண்டன. இதையடுத்து நாளுக்குநாள் இந்த குவாரிகளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. இந்நிலையில் தமிழக அரசு திடீரென மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி உள்ளிட்ட சிவகங்கை மாவட்டம் முழுவதும் செயல்படும் சவடு, கிராவல் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட குவாரிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இதனால் நிறுத்தப்பட்ட இந்த குவாரிகளிலிருந்து ஆற்று மணல் கொள்ளையடுக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் மூடப்பட்டுள்ள குவாரிகள் குறித்து உளவுப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வசீகரத்தின் உறைவிடம்... ஜொனிதா காந்தி!

சுவர் இருப்பின் சித்திரம்... நிகிதா ஷர்மா!

காஷ்மீரில் சண்டை எப்போது முடிவுக்கு வரும்? ஃபரூக் அப்துல்லா பதில்!

ஊட்டல் தேவஸ்தானத்தில் ஆடிப்பெருக்கு விழா

நோட்டுப் புத்தகம், எழுது பொருள்கள் அளிப்பு

SCROLL FOR NEXT