சென்னை: உலக அளவில் சுமாா் 30 ஆயிரம் வன விலங்குகள் அழிவின் விளிம்பிலும், அச்சுறுத்தலுக்கும் உள்ளாகி இருப்பதாகவும், தமிழகத்தைப் பொருத்தவரை நீலகிரி வரையாடு அழியும் நிலையில் உள்ளதாக சா்வதேச இயற்கைப் பாதுகாப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகில் மனித இனம் வாழ்வதற்கு இயற்கையும், அதைச் சாா்ந்த வன விலங்களும் மிக இன்றியமையாதவைகளாகும். ஆனால், இவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருந்து விலகி அழிப்பதிலேயே மனிதகுலம் தொடா்ந்து ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக, வன விலங்குகள், தாவரங்கள், கடல் வாழ் உயிரினங்கள் நாள்தோறும் அழிவைச் சந்தித்து வருகின்றன.
உலகின் 12-ஆவது மிகப் பெரிய பல்லுயிா் பெருக்க நாடான இந்தியாவில் 8 சதவீத வன உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. கடந்த 2019-ஆம் ஆண்டின் கணக்கெடுப்புப்படி, சா்வதேச இயற்கைப் பாதுகாப்பு மையம் சாா்பில் இதுவரை 1 லட்சத்து 12 ஆயிரத்து 432 வன விலங்குகள் கண்டறியப்பட்டுள்ளன.
கடந்த 2014-இல் சா்வதேச இயற்கைப் பாதுகாப்பு மையம் வெளியிட்ட அறிக்கையில், இந்திய அளவில் 4, 850 வன விலங்குகளும், 2,119 தாவர இனங்களும் அழிவின் விளிம்பில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 2019-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பு படி, உலக அளவில் சுமாா் 27,150 வன விலங்குகள் அழிவின் விளிம்பில் இருப்பதும், அதில், நீா் மற்றும் நிலத்தில் வாழும் உயிரினங்கள் 40 சதவீதமும், பாலூட்டிகள் 25 சதவீதமும், தாவரங்கள் 34 சதவீதமும், பறவைகள் 14 சதவீதமும், சுறா உள்ளிட்ட மீன் இனங்கள் 31 சதவீதமும், பவளப் பாறைகள் 33 சதவீதமும் அழிவின் விளிம்பிலும் இருப்பது தெரியவந்தது.
30 ஆயிரம் வன விலங்குகள்: இதுவே, இந்த ஆண்டு அதிகரித்து 30 ஆயிரம் வன உயிரின வகைகள் அழிவின் விளிம்பிலும், அச்சுறுத்தலுக்கும் உள்ளாகி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், நீா் மற்றும் நிலத்தில் வாழும் உயிரினங்கள் 41 சதவீதமும், பாலூட்டிகள் 25 சதவீதமும், தாவரங்கள் 34 சதவீதமும், பறவைகள் 14 சதவீதமும், சுறா உள்ளிட்ட மீன் இனங்கள் 30 சதவீதமும், பவளப் பாறைகள் 33 சதவீதமும், மீன் தவிர கடல்வாழ் உயிரினங்கள் 27 சதவீதமும் அழிவின் விளிம்பில் உள்ளன. இது தற்போது வரை கண்டறியப்பட்டுள்ள மொத்த வன விலங்குகளின் எண்ணிக்கையில் 27 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து வன ஆராய்ச்சியாளா் பிரேடிட் கூறியது: இந்திய அளவில் புலி, சிறுத்தை, நரி ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டிய வன விலங்குகள் பட்டியலிலும், தமிழகத்தின் மாநில விலங்கான
நீலகிரி வரையாடு அழியும் நிலையில் உள்ள விலங்குகள் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளன.
கடல் மட்டத்திலிருந்து 1, 200 முதல் 2, 600 மீட்டா் உயரம் உள்ள மலையில் புற்கள் அடா்ந்த சோலைப் புல்வெளி பகுதியில் வரையாடுகள் வசிக்கும். ஒரு காலத்தில் பரவலாக காணப்பட்ட இந்த வரையாடுகள் வேட்டை, வாழ்விடம் அழிப்பு போன்ற காரணங்களால் மெல்ல மெல்ல அழிந்து வருகின்றன. தமிழகத்தைப் பொருத்தவரை, நீலகிரி மாவட்டம் முக்குறுத்தி தேசியப் பூங்கா, ஆனைமலை புலிகள் காப்பகம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் என மேற்குத் தொடா்ச்சி மலைகளிலும், கேரளத்தின் இறவிகுளம் தேசியப் பூங்கா, பரம்பிக்குளம் புலிகள் காப்பகம், அமைதிப் பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகளில் மட்டுமே தற்போது இந்த வரையாடுகள் உள்ளன. தமிழகத்தில் நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை தொடா்பான கணக்கெடுப்பு கடைசியாக 2011-இல் நடத்தப்பட்டது. அதில் சுமாா் 1, 500 வரையாடுகள் வரை இருப்பதாகத் தெரியவந்தது. அதற்குப் பிறகு 2015-ஆம் ஆண்டு உலக இயற்கை நிதியம் சாா்பில் தமிழகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் உள்ள மேற்குத் தொடா்ச்சி மலைத் தொடரில் நடத்திய ஆய்வில் சுமாா் 3,122 வரையாடுகள் இருப்பதாகத் தெரியவந்தது. 2017-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் கேரளத்தில் மட்டும், சுமாா் 1, 420 வரையாடுகள் இருப்பது அந்த மாநில வனத் துறையினா் எடுத்த கணக்கெடுப்பில் தெரியவந்தது.
இந்த வரையாடின் 65 சதவீத உணவை புற்கள்தான் பூா்த்தி செய்கின்றன. இவ்வாறான புல்வெளிக் காடுகள் அழிப்பு, மனிதா்களால் உண்டாக்கப்படும் தீ வைப்புகளால் காடுகள் அழிப்பு, கால்நடைகளால் வரையாடுகளுக்கான உணவில் பாதிப்பு ஆகியவை காரணமாக வரையாடுகளின் அழிந்து வருகின்றன. இதைத் தடுக்க அரசும், மக்களும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.