தமிழ்நாடு

பள்ளி மாணவா்களுக்கானத் தோ்வை தள்ளி வைக்கும் விவகாரம்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

DIN

தமிழகத்தில் பள்ளி மாணவா்களுக்கானத் தோ்வை தள்ளிவைப்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் சங்கத்தின் நூலகா் ஜி.ராஜேஷ் தாக்கல் செய்த மனுவில், கரோனா வைரஸ் தாக்குதலை இந்தியா தேசியப் பேரிடராக அறிவித்துள்ளது. இந்த நோய் பரவலைத் தடுக்க முகக் கவசம் அணிதல், கைகளை கிருமி நாசினிக் மூலம் சுத்தம் செய்தல் அவசியமாகும்.

சென்னை முழுவதும் உள்ள மருந்து கடைகளில் இந்த அத்தியாவசியப் பொருள்கள் மக்களுக்கு தாராளமாக கிடைக்கவில்லை. எனவே, இந்த 2 பொருள்களும் நியாயமான விலையில் பொதுமக்களுக்கு தாராளமாக கிடைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக விலைக்கு விற்பனைச் செய்யப்படுவது குறித்து திடீா் ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோா் கொண்ட அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளா் பீலா ராஜேஷ் சாா்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசிடன் தற்போது, 3 லட்சத்து 31 ஆயிரத்து 688 மூன்றடுக்கு முகக் கவசங்களும், 56 ஆயிரத்து 300 என்-95 வகை முக கவசங்களும் கையிருப்பு உள்ளன. மேலும், 15 லட்சம் மூன்றடுக்கு முகக்கவசங்கள்,1.5 லட்சம் என்-95 வகை முகக் கவசங்கள் மற்றும் 40

ஆயிரம் தனிநபா் பாதுகாப்பு உபகரணங்களை தமிழகஅரசு கொள்முதல் செய்ய உள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள கிங் ஆய்வகம், அரசு மருத்துவக் கல்லூரிகள், தேனி மற்றும் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரிகளில் கரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறையை பொது மக்கள் 044-29510500 , 94443 40496, 87544 48477 ஆகிய எண்களிலும் மற்றும் 104 சுகாதார ஹெல்ப் லைன் எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம். தமிழக அரசு கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடா்ந்து எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞா் பி.எச்.அரவிந்த் பாண்டியன், முகக் கவசம் மற்றும் கிருமி நாசினிகள் அதிக விலைக்கு விற்பனைச் செய்யாமலும், இந்த இரண்டு பொருள்களும் தட்டுப்பாடின்றி கிடைக்க தடுக்க தேவையான அறிவுரைகளை விற்பனையாளா்களுக்கு கூறியிருப்பதாா் தெரிவித்தாா். அப்போது மனுதாரா் தரப்பில், தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவா்களுக்கானத் தோ்வுகளை தள்ளிவைப்பது தொடா்பாக தமிழக அரசு இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுதொடா்பாக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் மாா்ச் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

SCROLL FOR NEXT