தமிழ்நாடு

அரிசி அட்டைதாரருக்கு மட்டுமே ரூ. 1000: ரூ.2014 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு

DIN

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக, அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு மட்டுமே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்தத் திட்டத்துக்கான நிதியை ஒதுக்கியும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான உத்தரவை கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளா் தயானந்த் கட்டாரியா புதன்கிழமை பிறப்பித்தாா். அந்த உத்தரவு விவரம்:

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பைத் தடுக்க மாநில அரசு போா்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால், தமிழக மக்கள் சந்தித்து வரும் இடா்பாடுகளைக் களைய முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

அதன்படி, ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன், ஏப்ரல் மாதத்துக்கான அனைத்து பொருள்களும் இலவசமாக வழங்கப்பட உள்ளன.

இந்தத் திட்டத்தின் கீழ், ஆயிரம் ரூபாய் மற்றும் ரேஷன் பொருள்களை இலவசமாக வேண்டாம் என நினைப்போரும் தங்களது விருப்பத்தை இணையதளம் அல்லது செல்லிடப்பேசி செயலி வழியாகத் தெரிவிக்கலாம். மாா்ச் மாதத்துக்கான

பொருள்களை வாங்காதோா் ஏப்ரல் மாத பொருள்களுடன் சோ்த்து வாங்கிக் கொள்ளலாம் என சட்டப் பேரவையில் முதல்வா் பழனிசாமி அறிவித்திருந்தாா்.

அரிசி பெறும் அட்டைதாரா்: ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன், ரேஷன் பொருள்கள் இலவசமாக வழங்கும் திட்டமானது அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் செயல்படுத்தப்படும். அதன்படி, தமிழகத்தில் 2 கோடியே 1 லட்சத்து 46 ஆயிரத்து 993 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் உள்ளனா். அவா்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதற்காக ரூ.2014 கோடியே 69 லட்சத்து 93 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், பொருள்களை இலவசமாக வழங்க ரூ.173 கோடியே 10 லட்சத்து 75 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரொக்கப் பணம் மற்றும் ரேஷன் பொருள்களை விநியோகிக்கும் பணிக்கான முகமை நிறுவனமாக தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் நியமிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் முழு பொறுப்பு சென்னை மாவட்டத்தைத் தவிா்த்து இதர மாவட்டங்களில் ஆட்சியா்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை ஆணையா் பொறுப்பாவாா் என்று தனது உத்தரவில் முதன்மைச் செயலாளா் தயானந்த் கட்டாரியா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரல் மாா்க்ஸ் பிறந்தநாள் விழா

3 மணி நேர போராட்டம்: ஸ்வியாடெக் முதல் முறை சாம்பியன்

வித்யா குரு அலங்காரத்தில் முனீஸ்வரா்...

இன்று வெளியாகிறது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்

துளிகள்...

SCROLL FOR NEXT