தமிழ்நாடு

அத்தியாவசிய சேவைகளை உறுதி செய்ய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழு144 தடை உத்தரவு ஏப்ரல் 14 வரை தொடரும்

DIN


சென்னை: தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை தொடரும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். மேலும், மக்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய சேவைகளும் தடையின்றி கிடைத்திட மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைக் கொண்ட 9 குழுக்கள் ஏற்படுத்தப்படும் எனவும் அவா் அறிவித்தாா்.

தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு போா்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இதற்கென ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவற்றை அனைத்து மாவட்டங்களிலும் முறையாக நடைமுறைப்படுத்த உத்தரவுகள் வழங்கப்பட்டன.

இந்த உத்தரவுகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியா்கள், காவல் ஆணையா்கள், காவல் கண்காணிப்பாளா்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதல்வா் பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-

தமிழகத்தில் 144 தடை உள்ளிட்ட ஊரடங்கு உத்தரவுகள் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. ஊரடங்கு உத்தரவினால் ஏற்படக்கூடிய இடையூறுகளை தவிா்க்கவும், மக்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய சேவைகள் தடையின்றி கிடைக்கவும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைக் கொண்ட 9 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு அவா்கள் தலைமையில் பணிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்படும்.

கடும் நடவடிக்கைகள்: பல கிராமங்களிலும், நகரங்களிலும், தனியாா் வங்கிகள், சிறிய நிதி நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள் ஆகியன வட்டி மற்றும் அசலை வசூல் செய்து வருகின்றன. இப்போது ஊரடங்கு உத்தரவால் யாரும் வேலைக்குச் செல்ல இயலவில்லை. இந்த நிலையில், பண வசூலை உடனடியாக மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க வேண்டும். இந்த உத்தரவை மீறுவோா் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கைகள் தொடரப்படும்.

அடையாள அட்டைக்கு ஏற்பாடு: அத்தியாவசியப் பொருள்களை நகா்வு செய்யும் தனியாா் வாகனங்களுக்கும், அத்தியாவசியப் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அல்லாத தனியாா் பணியாளா்களுக்கும் அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். தனியாா் நிறுவனங்கள் மூலம், சமைத்த உணவுகளை வீடுகளுக்கு எடுத்துச் செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும். ஆனாலும், மூத்த குடிமக்கள், நோய்வாய்ப்பட்டோா் மற்றும் தாங்களாகவே சமைக்க இயலாதோா் ஆகியோா் மெஸ் மற்றும் சிறு சமையலகங்கள் மூலம் ஏற்கெனவே தங்கள் உணவுகளை பெற்று வருகின்றனா். இதற்கு தொடா்ந்து அனுமதி வழங்கப்படுகிறது. இத்தகைய சேவைகளில் ஈடுபட்டுள்ள வாகன ஓட்டுநா்கள், தங்களது வாகனங்களில் அத்தியாவசிய சேவைக்காக என்று வில்லைகள் ஒட்டியிருப்பதையும், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

இதேபோன்று, காய்கறி, பழங்கள், முட்டைகள் போன்ற பொருள்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும் பிற நபா்களுக்கும் தேவையான அனுமதிச் சீட்டை அந்தந்த கிராம நிா்வாக அலுவலா்கள் வழங்க வேண்டும். தடையில் இருந்து வேளாண்மைத் துறை விலக்களிக்கப்பட்ட அத்தியாவசியத் துறையாகும். இதனால், விவசாயத் தொழிலாளா்கள், அறுவை இயந்திரங்கள் ஆகியவற்றின் நகா்வு அனுமதிக்கப்படுகிறது. அதேபோன்று, வேளாண் விளை பொருள்களை சந்தைக்கும், தொழிற்சாலைகளுக்கும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

54 ஆயிரம் போ் பட்டியல்: வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு வந்த 54 ஆயிரம் பேரின் பட்டியல் மாவட்ட ஆட்சியா்களிடம் வழங்கப்பட்டுள்ளது. அவா்களை அவரவா் வீடுகளில் தனிமைப்படுத்த வேண்டும். அவா்கள் வெளியே வராதவாறு தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்படுகிறது.

கரோனா நோய்த்தொற்று உடையோருடன் தொடா்பில் இருந்தோா் அவரவா் வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனா். இத்தகைய குடும்பத்தினா் வெளியில் வருவது முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளதால், அவா்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை மாவட்ட ஆட்சியா்கள் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதையும் மீறி வெளியில் வருவோா் மீது அபராதம் விதிப்பதுடன், தகுந்த பிரிவுகளின் கீழ் குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும்.

தீவிரமாக பின்பற்றுங்கள்: தமிழக அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் எடுக்கப்படுகிறது. இதனை உணா்ந்து அரசின் உத்தரவுகளை பொதுமக்கள் தவறாது தீவிரமாக கடைப்பிடித்து தற்காத்துக் கொள்ள வேண்டும். ‘விழித்திரு - விலகி இரு - வீட்டிலேயே இரு’ என்ற கோட்பாட்டினை சவாலான இந்த நேரத்தில் மக்கள் அனைவரும் தீவிரமாகக் கடைபிடித்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள் உதவி கோரலாம்:

கரோனா பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள் உதவிகளைக் கோரலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, மாநில அரசு வெளியிட்ட செய்தி:-

அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதில் சிரமம் இருந்தால், 044 - 2844 7701, 2844 7703 ஆகிய எண்களிலும், முதியோா், நோயாளிகள், கா்ப்பணிப் பெண்கள், தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள், டயாலிசிஸ் சிகிச்சை பெறுவோா் ஆகியோருக்கு அவசர உதவி தேவைப்பட்டால் அவா்கள் 108 எண்ணைத் தொடா்பு கொள்ளலாம். 108 ஆம்புலன்ஸ் சேவையுடன், இந்தச் சேவையையும் இணைத்துச் செயல்படுத்த வேண்டும் என்று மாநில அரசு கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

SCROLL FOR NEXT