தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் சட்டமேலவை உறுப்பினருமான க.மீனாட்சிசுந்தரம் நெஞ்சு வலி காரணமாக தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் வியாழக்கிழமை காலமானார்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறை சேர்ந்த பாவலர் க.மீனாட்சிசுந்தரம் (90). 1931 ஆகஸ்ட் 15-ல் பிறந்தவர். பள்ளி ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 1973-ல் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தை நிறுவிய இவர், இதன் பொதுச் செயலாளராக தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டார். இயக்கத்தின் சார்பில் வெளியாகும் ஆசிரியர் துணைவன் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தவர்.
1978 மற்றும் 1984-ல் தமிழக முன்னாள் சட்டமேலவையில் திமுக சார்பில் உறுப்பினராக இருந்து செயல்பட்டவர். இந்திய ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவராக பலஆண்டுகள் பணியாற்றியவர். ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்து செயல்பட்டு வந்தார்.
வானம்பாடி நான், வாழ்த்தி மகிழ்கிறேன் உள்ளிட்ட நூல்களையும் எழுதியுள்னார். தமிழக முன்னாள் முதல்வர்மு.கருணாநிதியுடன் நெருங்கி பழகியவர். க.மீ என அழைக்கப்பட்ட இவர், இலக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசி வந்தார். இவருக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் வழங்கப்பட்ட மன்றக் கலைஞர், பெரியாரியலாளர், ஒளவை விருது போன்ற விருதுகள் வழங்கப் பெற்றவர்.
1985-ல் ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளில் நடைபெற்ற உலக ஆசிரியர் கருத்தரங்க மாநாடுகளில் பங்கேற்று பேசியுள்ளார். ஆசிரியர்கள் - கல்வி நலன் சார்ந்த பல போராட்டங்களை கடத்தி சிறை சென்றவர். காலமான மீனாட்சிசுந்தரத்துக்கு மனைவி சேது அம்மாள், நாகை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றும் மகன் செல்வகுமார் ஆகியோர் உள்ளனர். இறுதி நிகழ்ச்சிகள் தலை ஞாயிறு, அக்ரகாரம் தெருவில் உள்ள இல்லத்தில் இருந்து வெள்ளிக்கிழமை பகல் 3 மணிக்கு நடைபெறும்.
தொடர்புக்கு: 9442107255.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.