தமிழ்நாடு

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர் அடிக்கல்

DIN

சென்னை: திருப்பூரில் அமையவிருக்கும் அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினார்.

சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்தபடி அந்நிகழ்வில் பங்கேற்ற முதல்வர், கட்டுமானப் பணிகளை உரிய விதிகளின்படி மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். 

இதுதொடர்பாக அரசு வெளியிட்ட செய்தி:
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவக் கல்லூரிகளை அமைக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி,  கடந்த மூன்று ஆண்டுகளில் புதுக்கோட்டையிலும், கரூரிலும் தலா 150 இடங்களுடன் கூடிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டன.

அதேபோன்று,  ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செயல்பட்டு வந்த ஐ.ஆர்.டி. மருத்துவக் கல்லூரியும்  அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இது ஒருபுறமிருக்க, மத்திய அரசின் நிதியுதவியுடன், கடந்த 2019-ஆம் ஆண்டில், ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல், நீலகிரி, நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை தொடங்க தமிழக அரசு ஒப்புதல் பெற்றது.

அவ்வாறு அனுமதி பெறப்பட்ட மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டுமானப் பணிகள் படிப்படியாகத் தொடங்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில்,  திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நல்லூர் கிராமத்தில் ரூ. 336.96 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள அரசு மருத்துவக் கல்லூரி கட்டடங்களுக்கு திங்கள்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

ஏறத்தாழ 11.28.0 ஹெக்டேர் பரப்பில் அமையவுள்ள அக்கல்லூரியில் 150 எம்பிபிஎஸ் இடங்கள் உருவாகவிருக்கிறது. திருப்பூரில் மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு 60 சதவீத நிதியான ரூ. 195 கோடியை வழங்கவிருக்கிறது. 

எஞ்சிய தொகையயான ரூ. 141. 96 கோடியை மாநில அரசே ஏற்கும். அதில், முதல்கட்டமாக ரூ.100 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து அண்மையில் அரசாணை வெளியிடப்பட்டது நினைவுகூரத்தக்கது.

முன்னதாக, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், சுகாதாரத் துறை அமைச்சர்  சி. விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் க. சண்முகம், சுகாதாரத் துறைச் செயலர் பீலா ராஜேஷ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT