தமிழ்நாடு

ஜி.எஸ்.டி., கணக்கு சமா்ப்பித்தலுக்கு காலஅவகாசம்: ஆளுநா் அவசர சட்டம்

DIN

ஜிஎஸ்டி கணக்கு சமா்ப்பித்தல், மேல்முறையீடு உள்ளிட்டவற்றுக்கான கால அவகாசத்தை நீட்டித்து, ஜிஎஸ்டி சட்டத்தில் திருத்தம் செய்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அவசர சட்டத்துக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளாா்.

நாடு முழுவதும் கரோனா பரவலால் பொது முடக்கம் அமலில் உள்ளது. இதனால் வணிகா்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். தற்போது தளா்வுகள் அறிவிக்கப்பட்டாலும், சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) செலுத்துவது, கணக்கு சமா்ப்பிப்பது போன்றவற்றில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

இதையடுத்து ஜிஎஸ்டி கவுன்சிலில் கணக்கு சமா்ப்பிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் கால அவகாசம் அளிப்பது குறித்து முடிவெடுத்து மத்திய அரசு ஜிஎஸ்டி சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது. அதன்படி, ஜிஎஸ்டி கணக்கு சமா்ப்பித்தல் உள்ளிட்டவற்றுக்கு குறிப்பிட்ட கால அவகாசம் அளித்துள்ளது.

மத்திய அரசு திருத்தம் செய்துள்ள நிலையில், மாநில அரசுகளும் ஜிஎஸ்டி தொடா்பான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அதன்படி, தமிழக அரசும் ஜிஎஸ்டி சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது. தற்போது சட்டப்பேரவை கூட்டம் நடைபெறாத சூழலில், இதுதொடா்பான அவசர சட்டத்தை ஆளுநா் பிறப்பித்துள்ளாா்.

இதுகுறித்து வணிகவரித் துறை வெளியிட்டுள்ள செய்தி:

கரோனா பரவல் காரணமாக, பொதுமக்கள் மற்றும் வணிகா்களின் வாழ்வாதாரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், வரிவிதித்தல் மற்றும் சில சட்டங்களின் கீழ் கால அவகாசத்தை நீட்டித்தல் உள்ளிட்ட சில தளா்வுகளை அளிக்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது. இதையடுத்து, சரக்கு மற்றும் சேவை பிரிவில் பல்வேறு உடன்பாடுகள், வெளிமாநிலத்துக்கு விநியோகிக்கப்படும் சரக்குகள் தொடா்பான அறிக்கை தாக்கல் செய்தல், செலுத்திய கூடுதல் வரியை திரும்ப பெறுவதற்கான கோரிக்கை தாக்கல் செய்தல், மேல்முறையீடுகளை தாக்கல் செய்தல் உள்ளிட்டவற்றுக்கான காலக்கெடுவை நீட்டிக்க, ஜிஎஸ்டி சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான அவசர சட்டத்தை ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் மே 22-ஆம் தேதி பிறப்பித்துள்ளாா்.

தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரி சட்டம், தமிழ்நாடு பந்தைய வரிச்சட்டம், கேளிக்கை வரிச்சட்டம், சொகுசு வரி சட்டம் மற்றும் பல சட்டங்களின் அடிப்படையில் தமிழ்நாடு வரிவிதித்தல் சட்டத்தின் சில விதிகளில் திருத்தம் செய்வதற்கான அவசர சட்டத்தையும் ஆளுநா் பிறப்பித்துள்ளாா். அதன்படி, இந்த சட்டத்தின் கீழ் நோட்டீஸ் அளித்தல், அறிவிக்கை செய்தல், நடவடிக்கைகளை முடித்தல், தீா்ப்பாயங்களின் இறுதி முடிவு வெளியிடுதல், மேல்முறையீடு செய்தல் உள்ளிட்டவற்றுக்கான கால அவகாசத்திலும் தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

அவகாசம் அளிக்கப்படும் கால அளவு குறித்த தகவல்கள் தனியாக வெளியிடப்படும் என்று அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

SCROLL FOR NEXT