கரோனா வைரஸ் பாதிப்பால் அறிவிக்கப்பட்ட முழு முடக்கத்தால் அவிநாசி அத்திக்கடவு நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டப் பணிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் அளித்த தளர்வுகளால் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டு, மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களின் நீண்டநாள் திட்டமான அவிநாசி அத்திக்கடவு நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் ரூ.1,652 கோடி மதிப்பீட்டில் தற்போது நடைபெற்று வருகிறது. பவானி ஆற்றின் உபரி நீரைக் குழாய் மூலம் கொண்டு சென்று சுமார் 1,044 ஏரிகள், குளங்கள் மற்றும் குட்டைகளில் சேமிப்பதன் மூலம் நிலத்தடி நீர் அதிகரிக்கும் வகையில் திட்டமிடப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டன.
பவானி காளிங்கராயன் அணைக்கட்டு கீழ்ப்பகுதியில் முதன்மை நீரேற்று நிலையம் தொடங்கி, நல்லகவுண்டன்பாளையம், திருவாச்சி, போளநாயக்கன்பாளையம், எம்மாம்பூண்டி மற்றும் அன்னூர் ஆகிய இடங்களிலும் நீரேற்று நிலையம் அமைக்கும் பணியும், நிலத்தின் அடியில் குழாய் பதித்து அதன் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் பணிக்கான வேலைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டதால் பணிகள் நிறுத்தப்பட்டன.
கடந்த மார்ச் மாத இறுதியில் பணிகள் முற்றிலும் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்பணிகளை பொதுப்பணித்துறை கோவை மண்டல தலைமை பொறியாளர் எஸ்.ராமமூர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பவானி காலிங்கராயன் அணைக்கட்டின் கீழ்ப்பகுதியில் நடைபெற்று வரும் நீரேற்று நிலைய கட்டுமானம், நல்லகவுண்டன்பாளையம் நீரேற்று நிலைய கட்டுமானப் பணிகளும் ஆய்வு செய்யப்பட்டன.
தொடர்ந்து, பெருந்துறை சிப்காட்டில் இத்திட்டப் பணிகளுக்காக இரும்பு குழாய் தயாரிக்கும் பணிகளை ஆய்வு செய்யப்பட்டது. தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வு விதிகளைப் பின்பற்றி, பணிக்குத் தேவையான பணியாளர்கள் மற்றும் பொருட்களைக் கூடுதலாகப் பயன்படுத்தி கட்டுமானப் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
ஆய்வின்போது கண்காணிப்பு பொறியாளர்கள் எஸ்.சிவலிங்கம், காசிலிங்கம், செயற்பொறியாளர்கள் எஸ்.மன்மதன், கே.அன்பழகன், எல் அண்ட் டி திட்ட இயக்குநர் ரவிக்குமார் பட்னவிஸ் மற்றும் உதவி செயற்பொறியாளர் உதவிப் பொறியாளர்கள் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.