தமிழ்நாடு

அமெரிக்க துணை அதிபர் தேர்தல்: கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி அவரது குல தெய்வ கோயிலில் சிறப்பு வழிபாடு

DIN

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றிபெற வேண்டி அவரது குலதெய்வ கோயிலில் சிறப்பு வழிபாடு, அன்னதானம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி- திருமக்கோட்டை சாலையில் உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தில் பிறந்தவர் பி.வி. கோபால் ஐயர்- இவரது மனைவி ராஜம் . இவர்களுக்கு சியாமளா, சரளா என 2 மகள்கள்.
 கோபால் ஐயர் ஆங்கிலேய அரசில் சிவில் சர்வீஸ் பணியில் சேர்ந்தார். பின்னர், 1930-ஆம் ஆண்டு ஜாம்பியா நாட்டுக்கு இந்திய அரசு சார்பில் அனுப்பிவைக்கப்பட்டார். இதையடுத்து, அவர் அமெரிக்காவில் குடியேறினார். அவரது உறவினர்களும் 50 ஆண்டுகளுக்கு முன்னரே துளசேந்திரபுரத்திலிருந்து வெளியேறினர்.
 கோபால் ஐயரின் மகள் சியாமளா அமெரிக்காவில் சட்டம் பயின்றபோது உடன் படித்த டொனால்டை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
 இத்தம்பதியின் மகள்கள் கமலா, மாயா. இதில், கமலா, தனது தாயார் போல், அமெரிக்காவில் கல்வி பயின்றதுடன் அரசியலிலும் களம் இறங்கினார். தற்போது, அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் (55) களத்தில் உள்ளார்.
 கமலா ஹாரிஸ் துணை அதிபர் வேட்பாளராக, கடந்த செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டதையடுத்து, அவரது, தாய்வழி தாத்தா பிறந்த ஊரான மன்னார்குடி அருகேயுள்ள துளசேந்திரபுரம் கிராம மக்கள் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
 இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அமெரிக்காவில் அதிபர், துணை அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில், துளசேந்திரபுரத்தில் உள்ள தாய்வழி குடும்ப குலதெய்வ கோயிலான ஸ்ரீதர்ம சாஸ்தா, ஸ்ரீசேவக பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மூலவருக்கு பால் அபிஷேகமும், கமலா ஹாரிஸ் பெயரில் சிறப்பு அர்ச்சனையும் செய்யப்பட்டது.
 தென்னிந்திய உணவு வகைகளில் இட்லி, சாம்பார் தனக்குப் பிடிக்கும் என கமலா ஹாரிஸ் தெரிவித்திருப்பதை நினைவு கூரும் வகையில் அங்கிருந்த பக்தர்கள், பொதுமக்களுக்கு இட்லி, சாம்பர், வடை அன்னதானமாக வழங்கப்பட்டது.
 துளசேந்திரபுரம், பைங்காநாடு பகுதியைச் சேர்ந்த மக்கள் பங்கேற்று, கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி வழிபட்டனர். கடந்த 2014-ஆம் ஆண்டில் ஸ்ரீதர்ம சாஸ்தா கோயில் குடமுழுக்கு விழாவுக்கு ரூ. 5 ஆயிரம் நன்கொடையை சித்தி சரளா மூலம் கமலா ஹாரிஸ் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல கோயில் மடப்பள்ளிக்கு கோபால் ஐயர் நிதி வழங்கியது அங்குள்ள கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT