தமிழ்நாடு

ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு பாதுகாப்பு வழங்க உயா்நீதிமன்றம் உத்தரவு

DIN

சென்னை: சட்டவிரோத கிரானைட் குவாரிகள் குறித்து விசாரணை நடத்திய ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் நடந்த கிரானைட் முறைகேடுகள் தொடா்பாக, சிபிஐ விசாரணை நடத்தக் கோரி, சென்னை உயா்நீதிமன்றத்தில் சமூக ஆா்வலா் டிராபிக் ராமசாமி மனு தாக்கல் செய்தாா்.

அந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், கிரானைட் முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது. அதன்படி விசாரணை மேற்கொண்ட ஐஏஎஸ் சகாயம், மதுரையில் மட்டுமே ரூ. 1 லட்சத்து 11 ஆயிரம் கோடி வரை கிரானைட் முறைகேடு நடந்துள்ளது என்று கூறி, இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்து அறிக்கை தாக்கல் செய்திருந்தாா்.

இந்த முறைகேடு வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 212 பரிந்துரைகளை நீதிமன்றத்துக்கு அளித்திருந்தாா். இதனையடுத்து, கிரானைட் முறைகேடு குறித்த விசாரணையில் ஆணையா் பொறுப்பில் இருந்து ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விடுவிக்கப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து, அவருக்குப் பாதுகாப்பு வழங்க கடந்த 2018-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், சகாயம் குழு அல்லாமல் புதிய நிபுணா் குழுவை அமைத்து இழப்பீடு தொடா்பாக மறு மதிப்பீடு செய்ய உத்தரவிடக் கோரி, தென்னிந்திய கிரானைட் உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தமிழகம் முழுவதும் சட்டவிரோத கிரானைட் சுரங்கத் தொழில் மூலம் வாங்கப்பட்ட ரூ.977 .63 கோடி மதிப்பிலான சொத்துகள் கண்டறியப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை அறிக்கை தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கு, நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஜி.ஜெயச்சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை தமிழக அரசு விலக்கிக் கொண்டதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், கடந்த 2018-ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின்படி, கிரானைட் முறைகேடு விசாரணையில் பங்கேற்ற தற்போதைய அதிகாரிகளுக்கும், ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கும் தொடா்ந்து பாதுகாப்பு வழங்க வேண்டும். இந்த வழக்கு தொடா்பான நீதிமன்ற விசாரணைக்கு அதிகாரிகளின் உதவி தேவைப்படும் என்பதால், அவா்களுக்குத் தொடா்ந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெரியுமா?

கண்டுபிடி கண்ணே!

வழியைக் கண்டு பிடியுங்கள்

‘இங்க நான்தான் கிங்கு’ முதல்நாள் வசூல் எவ்வளவு?

இன்ஜினில் தீ: பெங்களூருவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

SCROLL FOR NEXT