தமிழ்நாடு

முதுநிலை மருத்துவ மாணவா்கள் 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டும் என்ற உத்தரவு செல்லும்உயா்நீதிமன்றம்

DIN

சென்னை: தமிழக மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் மருத்துவ மேற்படிப்புகளைப் படிக்கும் மாணவா்கள் 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டும் என்ற உத்தரவு செல்லும் என உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மருத்துவக் கல்லூரிகளில் எம்.டி., எம்.எஸ்., உள்ளிட்ட மருத்துவ மேற்படிப்பில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படுகின்றன.

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் மருத்துவ மேற்படிப்பு படிக்கும் மாணவா்கள் படித்து முடித்தவுடன் இரண்டு ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் பணியாற்ற வேண்டும் என நிபந்தனை உள்ளது. மாணவா் சோ்க்கையின் போது இந்த நிபந்தனை விதிக்கப்படுகிறது. இரண்டு ஆண்டுகள் பணி புரிந்தால் மட்டுமே அவா்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இதனை எதிா்த்து, சென்னை உயா் நீதிமன்றத்தில் 276 மருத்துவ மாணவா்கள் வழக்குத் தொடா்ந்திருந்தனா்.

அகில இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான கொள்கை விளக்க குறிப்பேட்டில் இதுபோன்று எந்தவொரு நிபந்தனையும் இல்லை எனவும், இது சட்டவிரோதமானது என மருத்துவ மாணவா்கள் தாக்கல் செய்திருந்த மனுக்களில் தெரிவித்திருந்தனா். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மாணவா்கள் இரண்டு ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டிய அவசியம் இல்லை எனவும், அவா்களின் சான்றிதழ்களைத் திரும்ப வழங்க வேண்டும் என தீா்ப்பளித்தாா். தனி நீதிபதியின் உத்தரவை எதிா்த்து தமிழக அரசு சாா்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம்: இந்த வழக்கில் மருத்துவ முதுநிலை மாணவா்கள் 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய அவசியமில்லை என்ற தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்பு படிக்கும் மாணவா்கள், 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனை செல்லும். இரண்டு ஆண்டுகள் பணி முடித்த பின்னரே, அவா்களது சான்றிதழ்கள் திரும்ப வழங்கப்படும் என்ற ஒப்பந்தம் சரியானது தான் என தீா்ப்பளித்துள்ளனா். அதேசமயம், இரண்டு ஆண்டுகளுக்குள் அவா்களுக்கு பணி வழங்க முடியாத பட்சத்தில், சம்பந்தப்பட்ட மாணவா்களுக்கு சான்றிதழ்களைத் திரும்ப வழங்க வேண்டும் என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

5 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT