அருப்புக்கோட்டை: கோவில் வழிபாடுகளில் விதிமுறைகளின்படி பக்தர்கள் அனுமதி
அருப்புக்கோட்டை நகர் மற்றும் சுற்றுவட்டத்திலுள்ள பிரதான கோவில்களில் 5 மாதங்களுக்குப் பின்னர் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் மற்றும் சுற்றுவட்டத்திலுள்ள பிரதான கோவில்களில் 4ம் கட்ட தளர்வு விதிமுறைகளின்படி வழிபாடுகளின்போது கடந்த 5 மாதங்களுக்குப் பின்னர் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
மத்திய அரசு வெளியிட்ட 4ம் கட்ட விதிமுறைகளின்படி செப்டம்பர் மாதம் முதல் தேதியிலிருந்து அனைத்து வித மத வழிபாட்டுத் தலங்களுக்கும் அனுமதியளிக்கப்பட்டது. இதன்படி அருப்புக்கோட்டை நகரில் காந்திநகர் ஸ்ரீடிசாய்பாபா கோவில், சொக்கலிங்கபுரம் அருள்மிகு சொக்கநாத சுவாமி, ஸ்ரீஅமுதலிங்கேஸ்பரர், ஸ்ரீமுத்துமாரியம்மன், ஸ்ரீஆயிரங்கண் மாரியம்மன், ஸ்ரீவாலசுப்பிரமணியர் கோவில், பந்தல்குடி ஸ்ரீடி சாய்பாபா கோவில் ஆகிய முக்கிய கோவில்களும் பக்தர்களுக்காகத் திறக்கப்பட்டன.
அப்போது உரிய விதிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும், கால்களைக் கழுவி, கைகளை கிருமிநாசினி கொண்டு கழுவியும் கோவில்களுக்குள் குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். சுமார் 5 மாதங்கள் இடைவெளிக்குப் பின்னர் கோவில்களுக்குள் வழிபாடுகளின்போது பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் பொதுமக்கள் மிக்க மகிழ்ச்சியடைந்தனர்.