தமிழ்நாடு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர்ந்து இரண்டாம் நாளாக 25 காசுகள் உயர்வு

DIN

 
நாமக்கல்:
பிற மண்டலங்களின் விலை உயர்வு அடிப்படையில், நாமக்கல் மண்டலத்தில் இரண்டாவது நாளாக முட்டை விலை 25 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.
 
நாடு முழுவதும் கரோனா தொற்று பரவலால் முட்டைக்கான தேவை அதிகரித்து வருகிறது. ஊட்டச்சத்துமிக்க உணவுப் பொருள்களில் முட்டைக்கும் முக்கிய பங்கு உண்டு. கடந்த சில மாதங்களாக முட்டைக்கான பண்ணைக் கொள்முதல் விலையை நிர்ணயிக்கும் 23 மண்டலங்களிலும் பண்ணையாளர்கள் முட்டை உற்பத்தியை குறைத்து விட்டனர். தற்போது தேவை அதிகரிக்கும் சூழலில் விநியோகத்திற்கான முட்டையை வழங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
 
ஆந்திர மாநிலத்தில் மாதந்தோறும் 30 முட்டை வீதம் பழங்குடியினத்தவர் மற்றும் கர்ப்பணி பெண்கள் உள்ள குடும்பத்துக்கு இலவசமாக விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் ஹைதராபாத், விஜயவாடா மண்டலங்களில் முட்டைக்கான தட்டுப்பாடும் நிலவும் நிலையில் அவற்றின் விலை உயர்ந்துள்ளது.
 
தமிழகத்தில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு மாதம் 10 முட்டை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களில் மதிய உணவு சாப்பிடும் மாணவர்கள் 70 லட்சம் பேருக்கு 7 கோடி முட்டைகள் விநியோகிக்கப்பட உள்ளது. இதற்காக பண்ணைகளில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. கரோனா பொது முடக்க தளர்வு, உணவகங்கள், விடுதிகள், பல்வேறு பொழுதுபோக்கு கூடங்கள் திறப்பால் முட்டைக்கான தேவை அதிகரித்துள்ளது.
 
நாமக்கல் மண்டலத்தில் உள்ள 1100 கோழிப்பண்ணைகள் மூலம் 3.50 கோடி முட்டைகள் தினசரி உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போதைய சூழலில் பண்ணைகளில் முட்டைகள் இருப்பு இல்லாமல் வெளியேறி வருகின்றன. வியாபாரிகளும் பண்ணைக் கொள்முதல் விலையில் 20 காசுகள் குறைத்து மொத்தமாக முட்டைகளை கொள்முதல் செய்கின்றனர். தமிழகம் மட்டுமின்றி கேரளம், கர்நாடகம், வெளி மாநிலங்களுக்கும் முட்டை அனுப்பப்பட்டு வருகிறது.
 
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் வழக்கமாக திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் நடைபெறும். பிற மண்டலங்களில் முட்டை விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால் இங்கும் விலையை உயர்த்துவது தொடர்பாக பண்ணையாளர்களிடம் கருத்துக்கள் கேட்டறியப்பட்டன.  அதனைத் தொடர்ந்து முட்டைக்கான பண்ணைக் கொள்முதல் விலை இரண்டாம் நாளாக 25 காசுகள் உயர்த்தப்பட்டு ஒரு முட்டை விலை ரூ.4.70–ஆக நிர்ணயம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. வரும் நாள்களில் விலை மேலும் உயர்வதற்கு வாய்ப்புள்ளது.
 
பிற மண்டலங்களில் புதன்கிழமை முட்டை விலை விவரம் காசுகளில்: ைஹதராபாத்–470, விஜயவாடா–475, பார்வாலா–470, ஹோஸ்பெட்–435, மைசூரு–473, சென்னை–460, மும்பை–505, பெங்களூரு–470, கொல்கத்தா–525, தில்லி–478.
 
பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி கிலோ ரூ.119–ஆகவும், முட்டைக் கோழி கிலோ ரூ.108–ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

பூவினுள் மணம் போல் அகத்திணை மரபு!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

SCROLL FOR NEXT