திமுக நிர்வாகி மீது அவதூறு பரப்பிய வழக்கு: முதல்வருக்கு நோட்டீஸ்
கோவை திமுக நிர்வாகி மீது அவதூறு பரப்புவதாக தொடரப்பட்ட வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: கோவை திமுக நிர்வாகி மீது அவதூறு பரப்புவதாக தொடரப்பட்ட வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை திமுக நிர்வாகியான சூலூர் ஏ. ராஜேந்திரன் கடந்த ஆண்டு மார்ச் 19-ஆம் தேதி சென்னையிலிருந்து கோவைக்கு ரயிலில் சென்றுள்ளார். அவருக்கு நீரழிவு பிரச்சினை இருப்பதால் மேல் படுக்கையிலிருந்து கீழே இறங்கும்போது, நிலை தடுமாறி கீழ் படுக்கையில் இருந்த பெண் மீது விழுந்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ரயில்வே நிர்வாகம் மற்றும் காவல்துறையில் அந்த பெண் வாய்மொழி புகார் அளித்தார். தனது செயல்பாடு உள்நோக்குடன் நடந்தது இல்லை நீரழிவு பிரச்சினை இருப்பதால் அவசரமாக இறங்கியதாக சூலூர் ராஜேந்திரன் அந்த பெண்ணிடம் விளக்கம் அளித்துள்ளார்.
இதனையடுத்து தனது புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டாமென அந்த பெண் தெரிவித்துள்ளார். ஆனால் சம்பவம் நடந்து 15 நாள்களுக்கு பின்னர் சூலூர் ராஜேந்திரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ரயில் பயணத்தின் போது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரங்களில் தன்னைப்பற்றி அவதூறாக பேசுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்கு எதிராக சூலூர் ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில் சம்பந்தப்பட்ட பெண் அளித்த புகாரில் பதிவான வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்துவிட்ட நிலையில், அவதூறாக சட்டப்பேரவைத் தேர்தல் பிரசார கூட்டங்களில் பேச தடை விதிக்க வேண்டுமெனவும், இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி வி.பார்த்திபன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இந்த மனு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.