தமிழ்நாடு

மே 1 முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டியதில்லை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

DIN

தம்மம்பட்டி: தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மே 1ந் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத்தேவையில்லை என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த வருடம் மார்ச் 16ந் தேதி முதல் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம் என்று அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து மார்ச் 25ந் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் தமிழகத்தில் பள்ளிகள் நடைபெறவில்லை. கல்வித்தொலைக்காட்சியின் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. 

இந்நிலையில் கரோனா பாதிப்பு குறைந்தநிலையில், தமிழகத்தில் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு 17.8.20 முதல் நாள் வரை ஆசிரியர்கள் மட்டும் வருகைபுரிந்து, மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள், நோட்டுகள், காலணிகள், புத்தகப்பை, அரிசி, பருப்பு, முட்டைகளை வழங்கியும் கல்வித்தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் குறித்து விழிப்புணர்வூட்டியும் வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்ககம் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும், அனைத்து கல்வி மாவட்ட அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள மின்னஞ்சலில் கூறியிருப்பதாவது,

நடப்பு கல்வியாண்டில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையில் பெருந்தொற்று காரணமாக மாணவ, மாணவியர் நேரிடையாக பள்ளிக்கு வந்து கற்கும் சூழல் ஏற்படவில்லை. 9ம் வகுப்பு முதல் 11 ம் வகுப்பு வரையில் வகுப்புகள் துவக்கப்பட்டு, பெருந்தொற்று அதிகரித்ததால், பள்ளியானது 22.3.21 அன்று மூடப்பட்டன. 12ம் வகுப்புகளுக்கு செய்முறைத் தேர்வு நிறைவுபெற்றுள்ள நிலையில், மே 5ந் தேதி துவங்க இருந்த பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிக்கு மாணவர்கள் நேரிடையாக வரவேண்டிய சூழல் ஏற்படவில்லை. 

எனினும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அறிவிப்பு வரும் வரையில், அவர்கள் தேர்விற்கு தயார்ப் படுத்துதல் வேண்டும். மற்ற வகுப்பு மாணவ, மாணவியருக்கு அவர்களது கற்றலை உறுதிப்படுத்தும் வகையில் இணைப்பு கட்டகமும், பயிற்சித்தாளும் வழங்கப்பட்டு அதுதொடர்பான நிகழ்ச்சிகள் தினசரி கல்வித்தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுவருகிறது.

இந்த சூழ்நிலையில், தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், வருகிற மே 1ந்தேதி முதல் பள்ளிக்கு வரத்தேவையில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. எனினும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, தேர்வு தேதி அறிவிப்பு வரும் வரையில், அவர்களுக்கு வீட்டிலிருந்தபடியே கற்றல் வழிகாட்டுதல்களை மேற்கொள்ளவும், இதர வகுப்பு மாணவர்களுக்கு, அண்மையில் வழங்கப்பட்டுள்ள இணைப்புப்பயிற்சி கட்டகம், பயிற்சித்தாள்கள் மூலம் தொடர்ந்து பயிற்சிகள் வழங்கிடவும், அதற்காக மாணவர்கள்,பெற்றோரிடம் உள்ள செல்லிடப்பேசி, வாட்ஸ்அப் உள்ளிட்ட இதர டிஜிட்டல் வழிகளை பயன்படுத்திடவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மாணவர்கள் மேற்காணும் வழிகளில் அனுப்பும் விடைத்தாள்களைச் சரிபார்த்து தேவையான வழிகாட்டுதல்களை ஆசிரியர்கள்,மாணவர்களுக்கு வழங்க தலைமையாசிரியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். அடுத்த கல்வியாண்டிற்கு பள்ளிகளை தயார் செய்யும்பொருட்டும், அதற்கான ஆயத்தப்பணிகளை மேற்கொள்ளும்பொருட்டும் மாணவர்களுக்கான பயிற்சிகளை ஆய்வுசெய்து, அதற்காக தொடர் நடவடிக்கை எடுக்கும்பொருட்டு, மே மாதத்தில் இறுதி வாரத்தில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டிய நிலை ஏற்படும்,இதற்காக தனியே அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

5 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT