மதுரை: மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ள நிலையில் ஆதீன மடத்துக்கு நித்தியானந்தா சொந்தம் கொண்டாடுவதால் ஆதீனத்தின் அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது.
திருஞானசம்பந்தரால் 1500 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது மதுரை ஆதீன மடம். மதுரை ஆதின மடத்தின் 292-வது குருமகா சன்னிதானமாக அருணகிரிநாதர் உள்ளார். இந்நிலையில் மூச்சுத் திணறல் காரணமாக மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மதுரை கேகே நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதையொட்டி பல்வேறு ஆதீனங்கள், மடாதிபதிகள் மருத்துவமனையில் மதுரை ஆதீனத்தை வியாழக்கிழமை சந்தித்து நலம் விசாரித்தனர். இந்நிலையில் மதுரை ஆதீனத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் மதுரை ஆதீன மடத்துக்கு உரிமை கோரி நித்தியானந்தா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது ஆதீன வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து மதுரை ஆதீன மடத்தில் ஆதீனம் அருணகிரிநாதர் தங்கியிருந்த அறை தருமபுர ஆதீனத்தால் பூட்டி சீல் வைக்கப்பட்டது. ஆதீனத்தின் அறையில் மதுரை ஆதீன மடத்துக்கு சொந்தமான சொத்துக்களின் ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்கள் இருப்பதாகவும் இவை நித்தியானந்தாவின் கைக்கு சென்றுவிடக்கூடாது என்பதற்காக தருமபுர ஆதீனத்தால் அறை பூட்டி சீல் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ஆதீன வட்டாரங்கள் கூறும்போது, ஆதீன கர்த்தாக்கள் உடல்நல குறைவால் வெளியில் சிகிச்சை பெறும் காலங்களில் அவர்களது அறைகள் பூட்டப்படுவது சம்பிரதாயமாக கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே மதுரை ஆதீனத்தின் இளைய தம்பிரான் முன்னிலையில்தான் ஆதீனத்தின் அறை பூட்டப்பட்டது. எனவே அறை பூட்டப்பட்டடதற்கும் நித்தியானந்தா அறிக்கைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.