சுதந்திர தினத்தன்று கூட்டப்பட வேண்டிய கிராம சபைக் கூட்டத்திற்கு அனுமதி அளிக்காதது குறித்து ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் 1994, பிரிவு 3-ன்கீழ் உள்ள நெறிமுறைகளை பின்பற்றி ஒவ்வொரு ஆண்டும் கிராம சபைக் கூட்டம் ஜனவரி 26, மே 1, ஆகஸ்டு 15 மற்றும் அக்டோபர் 2 ஆகிய நான்கு நாட்களில் நடத்தப்பட வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட விதிகளின்படி, இந்த ஆண்டு ஆகஸ்டு 15 சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடத்த உரிய அனுமதி ஆணை வழங்குமாறு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
கரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு நீட்டிப்பு செய்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் அரசாணை (நிலை) எண்.491, நாள் 31.07.2021 மற்றும் அரசாணை (நிலை) எண்.504, நாள் 07.08.2021-ல் வெளியிடப்பட்ட அறிவிக்கையில் கூட்ட நெரிசலை தவிர்க்குமாறும், விதிகளை மீறி பொதுமக்கள் கூட்டம் கூடினால் தக்க நடவடிக்கை எடுக்குமாறும் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க- மதுரை ஆதீனம் காலமானார்
கிராமப்புர பகுதிகளில் தற்போது கரோனா பெருந்தொற்று அரசின் தீவிர நடவடிக்கைக்குப் பின் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், கரோனா பெருந்தொற்று பரவலை மேலும் கட்டுப்படுத்தவும், பரவாமல் தடுக்கவும், அரசால் எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்காமல் இருக்கும் நோக்கில், பொதுமக்கள் நலன் கருதி இந்த ஆண்டு ஆகஸ்டு 15 அன்று நடத்தப்படவுள்ள கிராம சபை கூட்டம் கூட்டுவதற்கு அரசு அனுமதி வழங்கவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.