முகப்பு
தமிழ்நாடு

தேசிய நல்லாசிரியர் விருது: தமிழகத்தைச் சேர்ந்த இருவர் தேர்வு

மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் ஆண்டுதோறும் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கான பட்டியலில் இந்தாண்டு தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியைகள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:56 AM
ஆசிரியர்கள் கே.ஆஷா தேவி, டி.லலிதா
பகிர்:

மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் ஆண்டுதோறும் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கான பட்டியலில் இந்தாண்டு தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியைகள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். மேலும் புதுச்சேரியை சேர்ந்த ஆசிரியர் ஒருவருக்கும் இந்த விருது வழங்கப்படவுள்ளது.

2021 - ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதை இந்தியா முழுவதும்  44 பேர் பெற இருக்கிறார்கள்.

அதில் திருச்சி மாவட்டம் பிரதியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை  கே.ஆஷா தேவி மற்றும் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை டி.லலிதா ஆகியோர் தமிழகம் சார்பில் தேசிய நல்லாசிரியர் விருதிற்காக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பிராட்டியூர் நடுநிலைப் பள்ளியின் தலைமையாசிரியரான கே.ஆஷா தேவி, தனியார் பள்ளிகளுக்கு இணையாக பல்வேறு கட்டமைப்புகள் ஏற்படுத்தியுள்ளார். 50 கணினிகள், 5 ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்ளன. கிட்ஸ் கிளாஸ் என மழலையர்களுக்கு ஆங்கிலக் கல்வி அளிக்கும் வகுப்பும் உள்ளது. அறிவியல் ஆய்வகங்கள், நவீன கழிப்பறைகள், தனியார் பள்ளிகளுக்கு இணையாக கட்டடங்கள் என பரிந்து விரிந்துள்ளது இந்த பள்ளி. பள்ளியில் நுழையும் அனைவரும் இது அரசு பள்ளிதானா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் கட்டமைப்புகள் உள்ளன. 

இதுதொடர்பாக பேசிய தலைமை ஆசிரியை  கே.ஆஷா தேவி, “எனது, 33 ஆண்டு கால ஆசிரியர் பணிக்கான அங்கீகாரமாக இந்த விருதை கருதுகிறேன். அரசுப் பள்ளி மாணவர்கள் மிக திறமையானவர்கள். அவர்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைத்தால் நிறைய சாதனை புரிவர். எங்களது பள்ளியில் அதற்கான முயற்சியாக ஆங்கிலம் பேச கற்றுத் தருதல்  பயிற்சி வகுப்பை தொடங்கினோம். இது மாணவர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தனியார் பள்ளி மாணவர்களுக்கு நிகராக எங்களது மாணவர்கள் ஆங்கிலம் பேசுகின்றனர். அரசுப் பள்ளி ஆசிரியர் நினைத்தால் தனியார் பள்ளியை விட மிக சிறந்த பள்ளியாக அரசு பள்ளியை கொண்டுவர முடியும். அதற்கு உதாரணமாக எங்களது பள்ளி விளங்குகிறது” எனத் தெரிவித்தார்.

மேலும், “எங்களது பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் திறமைதான் இதற்கு அடிப்படை காரணமாக அமைந்துள்ளது. ஆங்கிலப்பேச்சு பயிற்சி மட்டுமல்லாது கராத்தே, சிலம்பம், இசை, கணினி, பாரம்பரிய நடனம், யோகா, கையெழுத்து பயிற்சி என பல்வேறு வகுப்புகள் எந்தவித கட்டணமும் இன்றி கற்றுத்தரப்படுகிறது. இதற்கான நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்கள் கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்த ஆசிரியர்களுக்கான ஊதியத்தை எங்களது பள்ளி ஆசிரியர்களே சொந்த செலவில் வழங்குகின்றனர்.

தனியார் பள்ளிக்கு நிகராக எங்களது பள்ளியில் உள்ள கட்டமைப்புகளுக்கு மாநகராட்சி நிர்வாகம்தான் பேருதவி அளித்துள்ளது. ஆங்கிலம் பேசுவதில் முன்னுதாரணமாக இருந்தாலும், தாய் மொழியாம் தமிழ் மொழிக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம். தமிழுக்கு சிறப்பு பயிற்சி அளித்து மாநில, மாவட்ட, ஒன்றிய அளவில் தமிழ் மொழி குறித்த போட்டிகளில் எங்களது மாணவர்கள் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளனர்.

தமிழ் எங்களது மூச்சு, ஆங்கிலம் எங்களது பேச்சு என்ற தாரக மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு பணியாற்றி வருகிறோம்” என்றார் கே.ஆஷா தேவி.

அதேபோல், தேசிய நல்லாசியர் விருதுக்கு மொடக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை டி.லலிதா (44) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு மூலப்பாளையத்தை சேர்ந்த இவர்,  முதுகலை இயற்பியல் ஆசிரியராக பணியை தொடங்கினார். 19 ஆண்டுகள் பணி் அனுபவம் உள்ள இவர் கடந்த 2019 ஆண்டு வரை சிவகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை இயற்பியல் ஆசிரியராக பணியாற்றினார். இதன்பிறகு 2019 ஆண்டு பதவி உயர்வில் சத்தியமங்கலம் அருகே தொட்டம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மொடக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியாராக பொறுப்பேற்றார்.

விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது குறித்து தலைமை ஆசிரியர் டி.லலிதா கூறியதாவது, “மாணவர்களுக்கு ஆராய்ச்சி சார்ந்த கல்வியை தொழில்நுட்பங்களை பயன்படுத்திக் கற்றுக்கொடுக்கும் செயல்முறைகளை பணியாற்றிய பள்ளிகளில் செயல்படுத்தி வருகிறேன். தொழில்நுட்பம் மூலம் மாணவர்களுக்கு எளிதாக கற்றுக்கொடுக்க முடியும்” எனத் தெரிவித்தார்.

“தலைமைப் பண்பு குறித்து சர்வதேச அளவிலான ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டுள்ளேன். இயற்கையை பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவர்களிடையை ஏராளமான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன். மாணவர்களுக்கு பாடங்கள் தொடர்பாக 160 வீடியோக்களை யூடியூப் சேனலில் பதிவு செய்து வைத்துள்ளேன். இயற்கை சூழலில் வீடு ஒன்றை கட்டுவதற்கான மாதிரியை தயார் செய்து வைத்துள்ளேன்” என ஆசிரியை டி.லலிதா குறிப்பிட்டார்.  

தேசிய விருது பெறும் ஆசிரியர் ஜெயசுந்தர்

புதுச்சேரியில்  மணப்பட்டு அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஜெயசுந்தர் என்பவரும் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →