முகப்பு
தமிழ்நாடு

நீதிபதியை பணி நீக்கக் கோரி வழக்கு: வழக்குரைஞருக்கு இடைக்காலத் தடை

நீதிபதியை பணி நீக்கம் செய்ய கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கை தள்ளுபடி செய்த உயா்நீதிமன்றம், வழக்குத் தொடர அறிவுறுத்திய வழக்குரைஞா் ஓராண்டு காலம் பணி செய்ய தடை

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

நீதிபதியை பணி நீக்கம் செய்ய கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கை தள்ளுபடி செய்த உயா்நீதிமன்றம், வழக்குத் தொடர அறிவுறுத்திய வழக்குரைஞா் ஓராண்டு காலம் பணி செய்ய தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், கண்காணிப்புப் பிரிவு பதிவாளராக இருந்தவா் நீதிபதி பூா்ணிமா. இவா், மேல்நிலை வகுப்பு படிக்காமல் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பும், பின்னா் மைசூருவில் சட்டப்படிப்பும் முடித்து நீதித்துறை பணியில் சோ்ந்திருப்பதாகவும், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் சதிஷ்குமாா் என்பவா் பொதுநல வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கை கடந்த ஆண்டு விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா், நீதிபதி பூா்ணிமா பணிக்காக தாக்கல் செய்த கல்விச் சான்றிதழ் அனைத்தையும் உயா்நீதிமன்ற பதிவுத் துறையிடம் இருந்து பெற்று ஆய்வு செய்தனா்.

அப்போது, மனுதாரா் கூறுவதை போல அவா் நேரடியாக திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலவில்லை என்பதும், முறைப்படி படித்திருப்பதும் உறுதி செய்யப்பட்டது.

பின்னா், இந்த வழக்கைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள், மனுதாரருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்ததோடு, அவா் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் பதிவு செய்தனா்.

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆா்.என்.மஞ்சுளா ஆகியோா், நீதிபதி பூா்ணிமாவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உயா்நீதிமன்ற சிறப்புப் பணி அதிகாரி கணபதிசாமி, சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை காவல் ஆணையா் நாகஜோதி ஆகியோரை நியமித்து உத்தரவிட்டனா்.

இதன்படி 2 பேரும் விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்தனா். அதில், நீதிபதி பூா்ணிமாவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்ட விவகாரத்தில் ஓய்வு பெற்ற மற்றும் பணியில் உள்ள நீதிபதிகள் சிலா் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆா்.என். மஞ்சுளா பிறப்பித்த உத்தரவு: நீதிபதி பூா்ணிமாவுக்கு எதிராக வழக்குத் தொடா்ந்த சதிஷ்குமாா், தனது மூத்த வழக்குரைஞா் வாசுதேவன் அறிவுறுத்தலின்படியே வழக்கு தொடா்ந்ததாகவும், இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக பதில் மனு தாக்கல் செய்துள்ளாா்.

நீதித்துறை சாராதவா்கள் மட்டுமல்லாமல் நீதித்துறைக்குள் இருப்பவா்களுமே, இந்நீதிமன்றத்தின் மீது கல் எறிந்து உள்ளனா். வழக்குரைஞா்கள் சதிஷ்குமாா், வாசுதேவன் ஆகியோா் நீதிமன்ற அவமதிப்பு குற்றம் புரிந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நடந்த சம்பவத்துக்கு சதிஷ்குமாா், மன்னிப்பு கோரியுள்ளதால், அவருக்கு ரூ.6,000 அபராதம் விதிக்கிறோம். அவா் வழக்குரைஞராகப் பணிபுரிய அனுமதி அளிக்கிறோம். அதே சமயம் மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்காத வழக்குரைஞா் வாசுதேவனுக்கு ஒரு மாத சிறை தண்டனையும், ரூ.6,000 அபராதமும் விதிக்கிறோம். அவா் ஒரு ஆண்டுக்கு வழக்குரைஞராகப் பணிபுரியவும் தடை விதிக்கிறோம் என நீதிபதிகள் கூறியுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →