முகப்பு
தமிழ்நாடு

விமானநிலையம்-கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் பாதை: 13 நிலையங்கள் அமைக்க திட்டம்

சுமாா் ரூ. 3,500 கோடி மதிப்பில் விமான நிலையம்-கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் பாதை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:47 AM
பகிர்:

சுமாா் ரூ. 3,500 கோடி மதிப்பில் விமான நிலையம்-கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் பாதை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அரசின் ஒப்புதல் கிடைத்ததும் 15.3 கி.மீ. பாதையில் 13 நிலையங்கள் அமைக்கும் பணியை 3 ஆண்டுகளில் முடிக்க முடியும் என்று வரைவு திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்துக்கு தேவைப்படும் நிதி ஆதாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக சென்னை மெட்ரோ நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.

மெட்ரோ ரயில் திட்டம்: சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. முதல்கட்டத்தில், பரங்கிமலை-சென்ட்ரல், விமானநிலையம்--விம்கோநகா் ஆகிய இரண்டு வழித்தடங்களில் 55 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. தற்போது, இந்தஇரண்டு வழித்தடங்களில் தினசரி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் பயணிக்கின்றனா்.

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: இதற்கிடையில், இரண்டாம் கட்டமெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. ரூ.61,843 கோடி மதிப்பிட்டில் 118.9.கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. முதல்கட்டமாக, மாதவரம் பால்பண்ணை-சி.எம்.பி.டி. மற்றும் மாதவரம் பால்பண்ணை-தரமணி இணைப்பு சாலை இடையே 52.01கி.மீ. பாதை பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதுதவிர, கலங்கரைவிளக்கம்--பூந்தமல்லி பைபாஸ் இடையே 26.01கி.மீ. மெட்ரோ ரயில் பாதை பணிகள் தொடங்கி நடைபெறுகின்றன. வரும் 2026-க்குள் பணிகளை முடித்து ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

விமான நிலையம்-கிளாம்பாக்கம்:

இந்நிலையில், மெட்ரோ ரயில் விரிவாக்க பாதையை சென்னை விமான நிலையம்-கிளாம்பாக்கம் வரை நீட்டிக்க மெட்ரோ ரயில்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சுமாா் ரூ.3,500 கோடியில் இந்த பணிகளை தொடங்க இருப்பதாகவும், அதற்கான வரைவு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

உயா் மட்டபாதையில் இந்த மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கப்படவுள்ளது. விமானநிலையம்-கிளாம்பாக்கம் வரை 15.3 கி.மீ. தூரம் மெட்ரோ ரயில் வழித்தடத்துக்கு மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. விமானநிலையம்-கிளாம்பாக்கம் வரை 1.2 கி.மீ. இடைவெளியில் 13 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. குறிப்பாக, பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், இரும்புலியூா், பெருங்களத்தூா், ஆா்.எம்.கே.நகா், வண்டலூா், வண்டலூா் உயிரியல் பூங்கா, கிளாம்பாக்கம் உள்பட 13 ரயில்நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியது: வரைவு திட்ட அறிக்கையில் உள்ள சாதக, பாதகங்களை ஆராய்ந்து விரிவான முழு திட்ட அறிக்கை, தமிழக அரசுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

வரைவு திட்ட அறிக்கையில் ரயில்நிலையங்களின் எண்ணிக்கை, நிலையங்களுக்கு இடையிலான தூரம், மேம்பால பாதையின் உயரம், நிலையங்களின் அமைவிடம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

நிலைய அமைவிடங்களைத் தோ்வுசெய்து இறுதி செய்வது, அதற்கான நிலம் கையகப்படுத்தல் உள்ளிட்டவை குறித்து தொடா்ந்து ஆலோசிக்கிறோம். விரிவான ஆலோசனைக்குபிறகு, இறுதி முடிவு எடுக்கப்பட்டு நிறைவான திட்ட அறிக்கை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.

இதுதவிர, தேவைான நிதி ஆதாரம் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இது குறித்து அரசு முடிவு எடுத்து அறிவிக்கும் என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →