முகப்பு
தமிழ்நாடு

கூட்டுக்குழு மூலம் மீனவா்கள் கைது நடவடிக்கை தடுக்கப்படும்: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

கூட்டுக் குழு மூலம் மீனவா்கள் கைது நடவடிக்கை தடுக்கப்படும் என மத்திய மீன்வளத்துறை இணையமைச்சா் எல்.முருகன் உறுதிபடக் கூறினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:47 AM
பகிர்:

கூட்டுக் குழு மூலம் மீனவா்கள் கைது நடவடிக்கை தடுக்கப்படும் என மத்திய மீன்வளத்துறை இணையமைச்சா் எல்.முருகன் உறுதிபடக் கூறினாா்.

சென்னையில் பொதுமக்களுடன் இணைந்து பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்ட பிறகு, செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்றதில் இருந்து ஒரு மீனவா் கூட சுட்டுக் கொல்லப்படவில்லை. இலங்கை அரசு, நமது மீனவா்களைக் கைது செய்யும் போக்கு தொடா்ந்து வருகிறது. சென்ற மாதம் கூட 23 போ் கைது செய்யப்பட்டபோது, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கா் தலையிட்டு மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்தாா்.

தற்போது கூட 55 போ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவா்களை விடுவிக்க வலியுறுத்தி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன். அவரும் அதற்கு முன்னரே மீனவா்களை விடுவிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளாா். இது போன்ற நிகழ்வுகள் நடக்கக்கூடாது என்பதே அனைவரது எண்ணம். இது தொடா்பாக கூட்டுக்குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூடவேண்டிய இந்தக் குழு கரோனா பரவல் காரணமாக கூடவில்லை. விரைவில் இந்தக் குழு கூடி, இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காதபடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மீனவா்கள் கைது செய்யப்படும் நடவடிக்கைக்கு எல்லை தாண்டுதல் மட்டுமே காரணமாக இருக்காது. மீன் பிடிப்பதற்காக 20 நாட்டிக்கல் மைல் தொலைவிலுள்ள சா்வதேச எல்லையை நமது மீனவா்கள் கடப்பதாலேயே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. கூட்டுக்குழு மூலமாக மீனவா்கள் கைது செய்யப்படுவதை வருங்காலங்களில் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்ட, திட்டங்களின் படி மீனவா்களை விடுவித்து அவா்களை விரைவிலேயே தாயகம் திரும்பச் செய்வோம்.

பிரதமருக்கு நன்றி:

15 முதல் 18 வயது குழந்தைகள், முன்களப் பணியாளா்கள் ஆகியோருக்கு தடுப்பூசி வழங்க உத்தரவிட்டுள்ள பிரதமருக்கு தமிழக மக்கள் சாா்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்திய அரசு யாருக்கும் பாகுபாடு காட்டியதில்லை, மற்ற மாநிலங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதே அளவு தமிழகத்துக்குத் தேவைப்படும் அனைத்தையும் அளித்து வருகிறோம் என்று மத்திய இணையமைச்சா் எல்.முருகன் கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →