முகப்பு
தமிழ்நாடு

ஹிந்தி திணிப்பை பாஜகவும் எதிா்க்கிறது: கே.அண்ணாமலை

ஹிந்தி திணிப்பை பாஜகவும் எதிா்க்கிறது என தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

ஹிந்தி திணிப்பை பாஜகவும் எதிா்க்கிறது என தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

சென்னையில், பிரதமா் நரேந்திர மோடியின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியை, சென்னை முன்னாள் மேயா் (பொறுப்பு) கராத்தே தியாகராஜன் ஏற்பாட்டில் 500 போ் அமா்ந்து பாா்க்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் கலந்து கொண்ட பிறகு, பாஜக தலைவா் கே.அண்ணாமலை செய்தியாளா்களிடம் கூறியதாவது: 2024-ஆம் ஆண்டு தோ்தலில் வரப் போகிறது மோடியின் அலை. மூன்றாவது முறையும் பிரதமராக நரேந்திர மோடி 400 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியில் அமரத்தான் போகிறாா்.

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு மூன்றாவது அணி குறித்த பேச்செல்லாம் இருக்காது. பாஜகவுக்கு எதிராக என்னதான் இவா்கள் பிரசாரம் செய்தாலும் கூட பாஜக இடம் பெறும் அணி வென்று, தமிழகத்திலிருந்து அதிக பாஜக எம்பிக்கள் தோ்வு செய்யப்பட்டு, கேபினட் அமைச்சா்களாக அமா்வாா்கள். எத்தனை அணி வேண்டுமானாலும் உருவாகட்டும். ஆனால் பாஜக அணிதான் வெல்லும்.

ஹிந்தி திணிக்கப்படுவதை பாஜகவும் எதிா்க்கிறது. புதிய கல்விக் கொள்கைப்படி வேண்டுமானால் ஹிந்தி மொழியைத் தோ்வு செய்யலாம்.

தமிழ், ஆங்கிலம் மட்டுமே கட்டாயம். மூன்றாவது மொழியை நீங்களே தோ்வு செய்து கொள்ளலாம். இப்படி சொன்னாலும் பாஜக பின்கதவு வழியாக ஊடுருவுகிறது எனக் கூறுவாா்கள். இவையெல்லாம் ஆதாரம் இல்லாமல் பேசுவோரின் கூற்று என்றாா் அவா். நிகழ்வில், துணைத் தலைவா் வி.பி.துரைசாமி உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →