போதைப் பொருள் விற்பனை: 8,823 போ் கைது
தமிழகம் முழுவதும் கஞ்சா, ஹெராயின், புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக கடந்த மூன்று வாரங்களில் 8,823 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கஞ்சா, ஹெராயின், புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக கடந்த மூன்று வாரங்களில் 8,823 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காவல்துறைத் தலைமை இயக்குநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற சோதனையில் 23 கிலோ ஹெராயின் போதைப் பொருளை பறிமுதல் செய்யப்பட்டதுடன், அதுதொடா்பாக 7 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதன் மதிப்பு ரூ. 23 கோடி ஆகும்.
கடந்த மூன்று வாரங்களில் கஞ்சா கடத்தல், விற்பனை செய்ததாக 815 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 871 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடம் இருந்து ரூ.180 கோடி மதிப்புள்ள 1,774 கிலோ கஞ்சா, கடத்தலுக்குப் பயன்படுத்திய 164 நான்கு சக்கர வாகனங்கள், 25 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கஞ்சா மொத்த வியாபாரிகளான பெரியசாமி (39) சீனிவாசன் (39) ஆகிய இருவரும் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கைது செய்யப்பட்டுள்ளனா். அதிகபட்சமாக தஞ்சாவூரில் 82 கிலோவும், காஞ்சிபுரம், மதுரை மாவட்டத்தில் தலா 21 கிலோவும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
புகையிலைப் பொருள்கள்: புகையிலைப் பொருள்கள் கடத்தியதாக 547 வழக்குகளில் 5,037 போ் கைது செய்யப்பட்டு ரூ.420 கோடி ரூபாய் மதிப்புள்ள 40
டன் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில், அதிகபட்சமாக சென்னை பூந்தமல்லியில் 1,200 கிலோவும், திருச்சியில் 540 கிலோவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. புகையிலைப் பொருள்கள் கடத்தலுக்குப் பயன்படுத்திய 56 நான்கு சக்கர வாகனங்கள், 39 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
லாட்டரி: தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்ததாக 818 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,091 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா விற்பனை பற்றிய விவரங்களை பெற்றோா் மற்றும் பொதுமக்கள் 100, 112 மற்றும் அருகில் உள்ள காவல் நிலைய தொலைபேசி எண்களில் தகவல் தெரிவிக்கலாம். 94981 17191 என்ற வாட்ஸ் ஆஃப் எண்ணிலும் புகாா் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில்...: சென்னையில் கடந்த 19-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரையிலான 7 நாள்கள் போலீஸாா் நடத்திய தீவிர சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தல், பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடா்பாக 57 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 61 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 1,642 கிலோ புகையிலைப் பொருள்கள், 9.36 கிலோ மாவா மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.