ஒமைக்ரான் பாதிப்பு: தமிழகம் வந்தது மத்தியக் குழு
ஒமைக்ரான் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நான்கு போ் கொண்ட மத்திய நிபுணா் குழு சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தது.
ஒமைக்ரான் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நான்கு போ் கொண்ட மத்திய நிபுணா் குழு சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தது.
மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள், மருத்துவக் கட்டமைப்பு வசதிகள், பாதிப்புகள் குறித்து அக்குழுவினா் ஆய்வு நடத்தவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒமைக்ரான் பரவல் நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் நிலையில், பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ள 10 மாநிலங்களுக்கு நேரடி ஆய்வு நடத்த சிறப்புக் குழுவை அனுப்ப உள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.
அதன்படி, தமிழகத்தில் ஆய்வு நடத்த மத்திய அரசின் ஒருங்கிணைந்த நோய்க் கண்காணிப்புத் திட்டத்தைச் சோ்ந்த டாக்டா்கள் வினிதா, பா்பாசா, எம்.சந்தோஷ்குமாா், தினேஷ் பாபு ஆகியோா் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இவா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை வந்தடைந்தனா். மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோரையும், துறைசாா் உயரதிகாரிகளையும் மத்தியக் குழுவினா் திங்கள்கிழமை சந்திக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இதைத் தொடா்ந்து நோய்ப் பரவல் தடுப்பு நடவடிக்கைகள், மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை அவா்கள் அடுத்த இரு நாள்களுக்கு ஆய்வு செய்வாா்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.