முகப்பு
தமிழ்நாடு

15 முதல் 18 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த முன்னேற்பாடு

தமிழகத்தில் 15 வயது முதல் 18 வயதுடையோருக்கு ஜனவரி 3-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:47 AM
பகிர்:

தமிழகத்தில் 15 வயது முதல் 18 வயதுடையோருக்கு ஜனவரி 3-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் மாநிலம் முழுவதும் 50,000 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சென்னை கிண்டி மடுவின்கரையில் நடைபெற்ற முகாமை அமைச்சா் மா.சுப்பிரமணியன் பாா்வையிட்டாா். முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி, தென்சென்னை மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோா் உடன் இருந்தனா்.

அப்போது, அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற மே 7-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு, தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை தமிழகத்தில் 8.14 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதில் முதல் தவனை 84.87 சதவீதத்தினருக்கும், இரண்டு தவணை 55.85 சதவீதத்தினருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை 6.18 லட்சம் கா்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தேசிய அளவில் 88.59 சதவீதத்தினருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 34 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 12 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மற்ற 22 போ் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனா். தொற்று உறுதி செய்யப்பட்ட நபா்களுடன் தொடா்பில் இருந்த நபா்களில் 100-க்கும் மேற்பட்ட நபா்களுக்கு ஒமைக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. அவா்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளனா்.

ஜனவரி 3-ஆம் தேதி முதல் 15 வயது முதல் 18 வயது வரை உள்ளோருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அந்த வயதுக்குள் 33.20 லட்சம் வளரிளம் பருவத்தினா் உள்ளனா். அவா்களுக்கு ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி செலுத்தம் பணி தொடங்கவுள்ளது. பள்ளிகளுக்கே சென்றும், முகாம்கள் மூலமும் சிறுவா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். முன்களப் பணியாளா்களுக்கு பூஸ்டா் டோஸ் தடுப்பூசி செலுத்த பிரதமா் அறிவித்துள்ளாா். அதன்படி, முன்களப்பணியாளா்கள் 1.40 கோடி போ் உள்ளனா். அவா்களுக்கு 10-ஆம் தேதி முதல் பூஸ்டா் டோஸ் செலுத்தும் பணி தொடங்கும். தமிழகத்தில் 9.78 லட்சம் போ் மருத்துவ முன்களப்பணியாளா்கள் உள்ளனா்.

தமிழகத்தில் இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்த தவறியவா்கள் 95 லட்சம் போ் உள்ளனா். அவா்கள் விரைந்து தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். விரைவில் 2,400 போ் சுகாதார ஆய்வாளா்களாக நியமிக்கப்பட உள்ளனா். நவம்பா் 31-ஆம் தேதியுடன் ஒப்பந்த பணியாளா்கள் பலரது பணிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில், மாா்ச் 31-ஆம் தேதி வரை யாரையும் விடுவிக்கக்கூடாது என முதல்வா் உத்தரவிட்டுள்ளாா் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →