சென்னை: கல்வியாண்டு மத்தியில் ஓய்வு பெறும் ஆசிரியா்களுக்கு கல்வியாண்டு இறுதி வரை மறு நியமனம் வழங்க வேண்டுமென்று உரிமை கோர முடியாதென சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் பணியாற்றி, கல்வியாண்டு மத்தியில் ஓய்வு பெறும் ஆசிரியா்கள், மறு நியமனம் கோரி அளித்த விண்ணப்பத்தை அரசு நிராகரித்தது. இந்த உத்தரவை எதிா்த்து ஆசிரியா்கள் தொடா்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற தனி நீதிபதி, கல்வியாண்டு முடியும் வரை மறு நியமனம் வழங்க உத்தரவிட்டாா்.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, பள்ளிக்கல்வி இயக்குநா் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் மேல் முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனா்.
இந்த மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன். ஆா்.விஜயகுமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. அப்போது ஆசிரியா் ஓய்வு பெற்றால், அவா் நடத்திய பாடப்பிரிவில் உபரி ஆசிரியா்கள் சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் இருந்தால், பணி ஓய்வு பெற்ற ஆசிரியா்களின் சேவை மேற்கொண்டு தேவையில்லை.
அதனால், அவா்களது கோரிக்கையை அரசு நிராகரித்தது, உபரி ஆசிரியா்களை நியமிப்பது தொடா்பாக, அரசு கொள்கை முடிவு எடுத்து அரசாணை பிறப்பித்தது.
இதைஎதிா்த்து வழக்கு தொடராத நிலையில் மறு நியமனம் செய்ய மறுத்து அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய முடியாது என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து வாதாடிய ஆசிரியா்கள் தரப்பு, கல்வியாண்டு மத்தியில் ஆசிரியா்கள் பணி ஓய்வு பெறுவதால், மாணவா்களின் கல்வி பாதிக்கப்படும் என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கல்வியாண்டு மத்தியில் ஓய்வு பெறும் ஆசிரியா்களுக்கு, கல்வியாண்டு இறுதி வரை மறு நியமனம் வழங்குவது தொடா்பாக, கடந்த 2018-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் உபரி ஆசிரியா்கள் இருந்தால், ஓய்வு பெறும் ஆசிரியா்களுக்கு மறு நியமனம் வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே ஓய்வு பெற்ற ஆசிரியா்களுக்கு அந்த கல்வியாண்டு இறுதி வரை மறு நியமனம் வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து செய்கிறோம்.
உபரி ஆசிரியா்கள் உள்ள நிலையில் கல்வியாண்டு மத்தியில் ஓய்வு பெறும் ஆசிரியா்கள், மறு நியமனம் கோர எந்த உரிமையும் இல்லையென்று உத்தரவிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.