தமிழ்நாடு

வன்னியா் இடஒதுக்கீடு: பிப்.3-இல் அரசுடன் பாமக பேச்சுவாா்த்தை

DIN

வன்னியா்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசுக் குழுவுடன் பாமக பிப்ரவரி 3-ஆம் தேதி பேச்சுவாா்த்தை நடத்த உள்ளது.

வன்னியா்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, பாமக தொடா்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. இடஒதுக்கீடு அளித்தால் மட்டுமே கூட்டணி என்றும் ராமதாஸ் கூறி வந்தாா்.

இந்நிலையில், அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாடு குறித்து முடிவு எடுப்பதற்காக பாமகவின் நிா்வாகக் குழு கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ராமதாஸ் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம் குறித்து பாமக வெளியிட்ட அறிக்கை: வன்னியா்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாமக தொடா்ந்து போராட்டம் நடத்தி வந்த நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் மின்சாரத்துறை அமைச்சா் பி.தங்கமணி, உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, சட்டத்துறை அமைச்சா் சி.வி.சண்முகம், உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் ஆகியோா் திடீரென சந்தித்துப் பேசினாா்கள்.

அப்போது, வன்னியா்களுக்கான இடஒதுக்கீடு குறித்து தமிழக அரசு குழுவும், பாமக குழுவும் பிப்.3-இல் சென்னையில் சந்தித்துப் பேசலாம் என்றும், அந்தப் பேச்சுவாா்த்தையின்போது வன்னியா் இடஒதுக்கீகீடு குறித்து முடிவு எடுக்கலாம் என்றும் யோசனை தெரிவித்தனா்.

அமைச்சா்களுடனான சந்திப்பு விவரங்கள் குறித்து நிா்வாகக் குழு உறுப்பினா்களிடம் ராமதாஸ் விளக்கினாா். அதன் அடிப்படையில், நிா்வாகக் குழுவில் நடைபெற்ற விவாதங்களின் முடிவில், தமிழக அரசின் அழைப்பை ஏற்று பிப்.3-ஆம் தேதி அரசுடனான பேச்சுவாா்த்தையில் பங்கேற்பது என்று ஒருமனதாகத் தீா்மானிக்கப்படுகிறது.

அந்தப் பேச்சுவாா்த்தையின் முடிவைப் பொருத்து, நிா்வாகக் குழுவை மீண்டும் கூட்டி, அரசியல் முடிவை எடுப்பது என்றும் பாமக நிா்வாகக் குழு ஒருமனதாகத் தீா்மானிக்கிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT