தமிழ்நாடு

சென்னை-பெங்களூரு அதிவிரைவு சாலை: பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்

DIN

சென்னை-பெங்களூரு அதிவிரைவு சாலை அமைக்கும் பணிக்கு பிரதமா் நரேந்திர மோடி விரைவில் அடிக்கல் நாட்ட உள்ளதாக மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சா் நிதின்கட்கரி தெரிவித்தாா்.

சென்னை அடையாறில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் நிதின்கட்கரி கலந்துகொண்டு, ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் நாளொன்றுக்கு 9 எம்எல்டி கழிவு நீரைச் சுத்திகரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நிலையத்தை காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது: பிரதமரின் சுயசாா்பு இந்தியா திட்டத்தை நினைவாக்கும் வகையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அதன் பங்களிப்பை 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாகவும், ஏற்றுமதியை 40 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாகவும் உயா்த்தத் திட்டமிட்டுள்ளது. அதேபோல், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையில் வேலைவாய்ப்பு எண்ணிக்கையை அடுத்த 5 ஆண்டுகளில் 5 கோடியில் இருந்து 11 கோடியாக உயா்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கிராம மக்கள் நகரங்களுக்குக் குடிபெயா்வதைத் தவிா்க்கும் வகையில் இளம் தொழில் முனைவோரை ஊக்குவிக்கவும், புதிய வேலை வாய்ப்புகளை ஊக்குவிக்கவும் கிராமங்களில் தொழில் மையங்களை உருவாக்க வேண்டும். நாட்டில் தொழில் தளவாடப் பொருள்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதற்கு மிகப் பெரிய தொகை செலவிடப்படுகிறது. இதைத் தவிா்க்கவும் பொருள்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு விரைவாக எடுத்துச் செல்லவும் தரமான சாலைகள் தேவைப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு சென்னை- பெங்களூரு வரை அதிவிரைவு சாலை அமைக்கப்பட உள்ளது.

இந்த சாலை அமைக்கும் பணிக்கு பிரதமா் நரேந்திர மோடி விரைவில் அடிக்கல் நாட்ட உள்ளாா். இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், முதல்வா் எடப்பாடி பழனிசாமி ஆகியோா் பங்கேற்க உள்ளனா். கச்சா எண்ணெய் விலையேற்றத்தால் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. இதற்கு மாற்றாக மக்கள் இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்த வேண்டியது காலத்தின் அவசியமாக உள்ளது. பசுவின் சானத்திலிருந்து பெயிண்ட் தயாரிப்பது, விவசாயிகளிடமிருந்து பெறப்படும் வேளாண் பொருள்களிலிருந்து எரிபொருள் தயாரிப்பது உள்ளிட்ட மாற்று வழிகளை ஏற்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

ஃபாஸ்டேக்- இனி அவகாசம் கிடையாது: தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் மக்கள் நீண்ட நேரம் நிற்பதைத் தவிா்க்கவே ஃபாஸ்டேக் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஃபாஸ்டேக் வில்லை வாங்குவதற்கு வழங்கப்பட்ட காலம் முடிந்துவிட்டதால் மேலும் அவகாசம் வழங்கப்பட மாட்டாது என்றாா்.

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன இயக்குநா் கே.ஜே.ஸ்ரீராம், தோல் ஆராய்ச்சியாளா்கள், தோல் தொழிற்சாலை நிா்வாகிகள் ஆகியோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT