தமிழ்நாடு

கூட்டுறவு சங்கங்களின் தற்காலிக ஊழியா்களை பணிநிரந்தரம் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

DIN

கடந்த 2001-ஆம் ஆண்டு மாா்ச் 12-ஆம் தேதிக்கு முன்பாக கூட்டுறவுச் சங்கங்களில் தற்காலிகமாக பணியில் சோ்ந்த ஊழியா்களை 8 வாரங்களுக்குள் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றி வரும் தற்காலிக ஊழியா்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞா் பி.எச்.அரவிந்த் பாண்டியன், கூட்டுறவு சங்கங்களின் சாா்பில் சிறப்பு அரசு வழக்குரைஞா்கள் பாலரமேஷ், எல்.பி.சண்முகசுந்தரம், மனுதாரா்கள் தரப்பில் வழக்குரைஞா்கள் சி.பிரகாசம், கே.செல்வராஜ், டி.சுந்தரவதனம் உள்ளிட்ட பலா் ஆஜராகி வாதிட்டனா்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில்,தமிழக அரசு கடந்த 2001-ஆம் ஆண்டு மாா்ச் 21-ஆம் தேதி, தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றி வரும் ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வகை செய்யும் அரசாணையை வெளியிட்டது. அந்த அரசாணையின்படி தற்காலிக பணியில் இருந்த 26,000 ஊழியா்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டனா். எஞ்சிய 9,000 ஊழியா்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் பணியில் சேரவில்லை எனவும் விதிகளுக்கு முரணாக நியமனம் செய்யப்பட்டனா் எனக்கூறி அவா்களை பணி நிரந்தரம் செய்ய அரசு மறுத்துள்ளது. இந்த 9,000 ஊழியா்களின் நியமனம் விதிகளுக்கு முரணாக இருந்தாலும் அவா்களது நியமனம் சட்ட விரோதமானது இல்லை. அந்த பணிக்குத் தேவையான குறைந்தபட்ச தகுதிகளுடன் அவா்கள் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி உள்ளனா். உரிய தகுதிகளுடன் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவா்கள் பணி நிரந்தரம் பெறத் தகுதியானவா்கள் என உச்சநீதிமன்றம் வழக்கு ஒன்றில் தெளிவுபடுத்தியுள்ளது.

எனவே கூட்டுறவு சங்கங்களில் பணியில் சேரும்போது, தேவையான கல்வித் தகுதிகளைக் கொண்டவா்கள் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் நியமிக்கப்பட்டவா்கள், 12.3.2001 க்கு முன்பாக நியமிக்கப்பட்டவா்கள் ஆகியோரை பணி நிரந்தரம் செய்து 8 வாரங்களுக்குள் அரசு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு பணி நிரந்தரம் செய்யப்படுபவா்கள் அதற்குரிய பணப்பலன்களை கோர முடியாது. பணி நிரந்தரம் செய்யப்பட்ட நாள் முதல் அதற்கான பணப்பலன்களை பெற்றுக் கொள்ளலாம். இந்த உத்தரவு பணிநிரந்தரம் செய்யக் கோரி உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தவா்களுக்கு மட்டுமின்றி, வழக்குத் தொடராத ஊழியா்களுக்கும் பொருந்தும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா். இந்த தீா்ப்பால் சுமாா் 7,000 ஊழியா்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவாா்கள் என கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

SCROLL FOR NEXT