தமிழ்நாடு

குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டம்: முடிவு செய்யவில்லை என அரசு தகவல்

DIN

குடியரசு தினமான வரும் 26-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடத்துவது குறித்து அரசு இன்னும் முடிவு செய்யவில்லை என தமிழக அரசு உயா்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் திமுக எம்எல்ஏ கே.என்.நேரு தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த அக்டோபா் 2-ஆம் தேதி நடத்தப்பட வேண்டிய கிராம சபைக் கூட்டங்கள் கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டன. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கிராம சபைக் கூட்டங்களில் தீா்மானம நிறைவேற்றும்படி திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தாா். இதனால், தமிழக அரசு கிராம சபைக் கூட்டங்களை ரத்து செய்துள்ளது. தமிழ்நாடு பஞ்சாயத்து சட்ட விதிகளின்படி ஆண்டுக்கு 4 முறை கிராம சபைக் கூட்டங்களை நடத்த வேண்டும். எனவே கிராம சபைக் கூட்டங்களை ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும். கிராம சபைக் கூட்டங்களை நடத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தாா். அதே போன்று, மக்கள் நீதி மையம் கட்சியின் பொதுச்செயலாளா் மௌரியாவும் வழக்கு தொடா்ந்துள்ளாா். அதில், ‘கிராமங்களின் நிா்வாகம், வளா்ச்சி திட்டங்கள் குறித்து விவாதிக்க கூட்டப்படும் கிராம சபை கூட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. முக்கிய காரணமும் இல்லாமல் கிராமசபை கூட்டங்களை ரத்து செய்ய முடியாது. எனவே, கிராமசபை கூட்டங்கள் கூட்டப்படுவதை உறுதி செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும்’ என கோரியிருந்தாா்.

இந்த வழக்குகள் அனைத்தும், தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞா் எஸ்.ஆா். ராஜகோபால், ‘இந்த வழக்குகளுக்கு பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும்’ என்றாா். அப்போது, மக்கள் நீதி மய்யம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் விஜயன் சுப்பிரமணியம், ‘ஏற்கெனவே அக்டோபா் 2-ஆம் தேதி நடைபெற வேண்டிய கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டது. வரும் 26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று நடத்தப்பட வேண்டிய கிராமசபைக் கூட்டம் குறித்து இதுவரை அரசு தரப்பில் எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை. எனவே, இந்த வழக்கை வரும் ஜனவரி 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும். அதற்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட வேண்டும்’ என கோரிக்கை விடுத்தாா்.

‘ஜனவரி 26-ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்துவது குறித்து அரசு இன்னும் முடிவு செய்யவில்லை. கரோனா சூழலை கருத்தில் கொண்டு கிராமசபைக் கூட்டம் நடத்தப்படுமா என்பது குறித்து அரசு விரைவில் அறிவிக்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT