தமிழ்நாடு

வாழப்பாடி அருகே சலூன் கடைக்குள் புகுந்த புள்ளிமான்: தெரு நாய்கள் கடித்ததில் படுகாயம்

DIN

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூரில் வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த புள்ளிமானை தெருநாய்கள் துரத்தியதால், சலூன் கடைக்குள் புகுந்து தஞ்சமடைந்தது. படுகாயமடைந்த மானை மீட்ட வனத்துறையினர், சிகிச்சை அளித்து  பாதுகாத்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே நெய்யமலை, அருநூற்றுமலை, சந்துமலை, பேளூர் வெள்ளிமலை, மண்ணூர்மலை உள்ளிட்ட வனப்பகுதிகளில் ஏராளமான இன மான்கள் வாழ்ந்து வருகின்றன. குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளில் புள்ளிமான்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை செக்கடிப்பட்டி, வெள்ளிமலை வனப்பகுதியில் இருந்து  வழி தவறிவந்த, 3 வயதுடைய ஆண் புள்ளிமான் ஒன்று, பேளூர் பேரூராட்சி குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்தது.

தெரு நாய்கள் துரத்தி கடித்ததில் படுகாயமடைந்த இந்த புள்ளிமான், சின்னராஜ் என்பவரது சலூன் கடைக்குள் புகுந்து தஞ்சமடைந்தது.

இதனைக் கண்ட இப்பகுதி மக்கள் வாழப்பாடி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த வாழப்பாடி வனச்சரகர் துரைமுருகன் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து சென்று, சலூன் கடைக்குள் தஞ்சமடைந்திருந்த புள்ளிமானை மீட்டு, கால்நடை மருத்துவர்களை வரவழைத்து சிகிச்சை அளித்தனர். 

புழுதிக்குட்டை கிராமத்திலுள்ள வனத்துறை ஓய்வு விடுதிக்கு இந்த மானை கொண்டு சென்று பாதுகாத்து வருகின்றனர். சலூன் கடைக்குள் புகுந்த புள்ளிமானை காண்பதற்கு இப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்-சிறுமியர் குவிந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

SCROLL FOR NEXT