சங்ககிரி: இறுதிச் சடங்கில் வெடித்த வெடியால் உணவு விடுதியின் கூரையில் தீ
தனியார் உணவு விடுதி கூரை மீது திங்கள்கிழமை தீப்பொறி விழுந்ததில் தீப்பற்றி எரிந்தது. தீ விபத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி நகர் புதிய எடப்பாடி சாலை, வாணியர் காலனி பகுதியில் முதியவர் இறுதி சடங்கிற்காக வைத்த வெடியில் அருகிலிருந்து தனியார் உணவு விடுதி கூரை மீது திங்கள்கிழமை தீப்பொறி விழுந்ததில் தீப்பற்றி எரிந்தது. தீ விபத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சங்ககிரி புதிய எடப்பாடி சாலை, வாணியர் காலனி பகுதியில் தனியார் உணவு விடுதி செயல்பட்டு வருகின்றது. அப்பகுதியில் முதியவர் ஒருவர் காலமானதையடுத்து அவரது உறவினர்கள் வெடி வைத்துள்ளனர். அதிலிருந்து தீப்பொறி எதிர்பாராதவிதமாக உணவு விடுதியின் கூரை மீது விழுந்துள்ளது. அதில் கூரை தீப்பற்றி எரிந்தது. இதனை அருகிலிருந்து பொதுமக்கள் பார்த்து சப்தமிட்டுள்ளனர்.
பொதுமக்களின் கூச்சலையடுத்து கடைக்கு அருகிலிருந்தவர்கள் கடையில் இருந்த எரிவாயு உருளையை வெளியே எடுத்து வந்தனர். அதற்குள் தகவலறிந்து வந்த சங்ககிரி தீயணைப்பு நிலைய அலுவலர் டி.அருள்மணி தலைமையிலான வீரர்கள் மேலும் தீ பரவாமல் தீயை அணைத்தனர். தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் உணவு விடுதியில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. நகரின் மையப்பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.