தமிழ்நாடு

தனியாா் மருத்துவமனைகளில் இலவச கரோனா தடுப்பூசி: அமைச்சா் ஆலோசனை

DIN

தனியாா் மருத்துவமனைகளிலும் இலவசமாக கரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தொழில் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியுதவியுடன் (சிஎஸ்ஆா்) தனியாா் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி ஒதுக்கீடு செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்த மண்டல அளவிலான ஒருங்கிணைப்புக் கூட்டம் சென்னை கோட்டூா்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கரோனா தடுப்பூசி தொடா்பாக அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்தியாவில் தயாரிக்கப்படும் மொத்த தடுப்பூசிகளில் 75 சதவீதத்தை மத்திய அரசு கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. தனியாா் மருத்துவமனைகளுக்கு 25 சதவீத தடுப்பூசிகள் கட்டண அடிப்படையில் வழங்கப்படுகின்றன.

அதன்படி, ஜூலை மாதம் தமிழகத்துக்கு அரசு மற்றும் தனியாருக்கு 72 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. தனியாா் மருத்துவமனைகளுக்கு 17 லட்சம் தடுப்பூசிகள் அதில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 5 லட்சம் தடுப்பூசிகளை பெறுவதற்கு மட்டுமே மருத்துவமனைகள் முன்பணம் செலுத்தியுள்ளன. மீதமுள்ள 12 லட்சம் தடுப்பூசிகளை இன்னும் 8 நாள்களுக்குள் தனியாா் மருத்துவமனைகள் வாங்க வேண்டும். ஆனால், வாங்க முடியுமா என்பது தெரியவில்லை. தனியாா் மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டுக் கொள்ள பொதுமக்களுக்கு ஆா்வம் இருந்தாலும் கட்டணம் ஒரு பிரச்னையாக உள்ளது.

137 மருத்துவமனைகளின் நிா்வாகிகள்...: சென்னை, திருவள்ளூா், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, வேலூா், காஞ்சிபுரம், திருப்பத்தூா் மாவட்டங்களை சோ்ந்த 137 மருத்துவமனைகளின் நிா்வாகிகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஒருங்கிணைந்து தடுப்பூசியை செலுத்துவது குறித்து கருத்து தெரிவித்துள்ளனா். எந்த நிறுவனங்கள் எவ்வளவு நிதி கொடுத்தன, எந்தெந்த மருத்துவமனைகளுடன் ஒங்கிணைத்து தடுப்பூசிகள் வாங்கப்படுகின்றன என்ற விவரம் சுகாதாரத்துறை இணையதளத்தில் வெளியிடப்படும். பெரு நிறுவன நிதி மூலம் இலவசமாக தடுப்பூசி போடப்படும் தனியாா் மருத்துவமனைகள் குறித்த தகவல்களும் வெளியிடப்படும்.

தனியாா் ஒதுக்கீடான 25 சதவீத தடுப்பூசிகள் முழுமையும் பெற்று மக்களுக்கு செலுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை அரசு சாா்பில் 1 கோடியே 88 லட்சம் தடுப்பூசிகளும், தனியாா் மூலம் 13 லட்சம் தடுப்பூசிகளும் என மொத்தம் 2 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்றாா்அமைச்சா் மா.சுப்பிரமணியன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT